நகைச்சுவைச் செல்வர் எஸ்.எஸ்.சந்திரன்

|

SS Chandran
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காமெடி நடிகர்களில் எஸ்.எஸ்.சந்திரனுக்கு தனி இடம் உண்டு.
இரட்டை அர்த்தத்துடன் கூடிய வசனங்களைப் பேசியவர் என்ற ஒரு பெயர் இருந்தாலும் கூட இவரது காமெடி தனி பாணியிலானது என்பதில் சந்தேகம் இல்லை.
காமெடி நடிகராக, வில்லனாக, குணச்சித்திர வேடத்தில் என பல்வேறு வகையான நடிப்பைக் கொடுத்தவர் எஸ்.எஸ்.சந்திரன். திரையுலகினரால் எஸ்எஸ் என அழைக்கப்பட்ட சந்திரன், நகைச்சுவை செல்வர் என்றும் அழைக்கப்பட்டார்.
தீவிர திமுக அனுதாபியாக இருந்தவர் சந்திரன். பின்னர் மதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார். வைகோவின் தீவிர ரசிகராகவும் விளங்கியவர். திமுகவில் தான் ஒதுக்கப்படுவதாக நினைத்த சந்திரன் அதிமுகவில் இணைந்தார். அப்போது அவருடன் இணைந்தவர் ராதாரவி.
தனது இறுதி மூச்சு வரை அதிமுகவில் இருந்தவர் சந்திரன். தீவிர ஜெயலலிதா விசுவாசியாகவும் செயல்பட்டு ஜெயலலிதாவின் மனதில் இடம் பிடித்தவர்.
இவரை ராஜ்யசபா எம்.பியாக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா. அதேபோல கடந்த லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியையும் ஒதுக்கினார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை சந்திரன்.
நடிகராக மட்டுமல்லாமல், சிறப்பாக பேசக் கூடிய திறமையும் படைத்தவர் சந்திரன். சமீப காலமாக இருதயக் கோளாறால் அவதிப்பட்டு வந்த போதிலும் கூட அவர் தனது பேச்சை நிறுத்தவில்லை. மாறாக தொடர்ந்து அதிமுக கூட்டங்களுக்குச் சென்று பேசி வந்தார்.
அதிமுக கூட்டத்தில் பேசி முடித்த நிலையில் அவர் மரணத்தைத் தழுவியிருப்பது அதிமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Post a Comment