திருப்போரூரை அடுத்த பையனூரில் திரைப்பட துறையினருக்கு அரசு 96 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது. இதில் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 ஏக்கர் இடமும் ஸ்டூடியோ கட்ட 15 ஏக்கரும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 10 ஏக்கரும், சின்னத்திரை கலைஞர்களுக்கு 8 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளது.
டி.வி. நடிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கரில் 600 சதுர அடி பரப்பு அளவில் 504 வீடுகளும் 800 சதுர அடிபரப்பில் 280 வீடுகளும் 1000 சதுர அடி பரப்பில் 364 வீடுகளும் ஒரு ஷாப்பிங் மாலும் கட்டப்படுகின்றன.
சின்னத்திரை கலைஞர்களுக்கான வீடு கட்டும் பணி துவக்க விழா பையனூரில் இன்று நடந்தது. விழாவுக்கு கண்மணி சுப்பு தலைமை தாங்கினார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை ஆகியோர் விழாவில் பங்கேற்று கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். ஷாப்பிங் மால் கட்டுமான பணியை நடிகை குஷ்பு தொடங்கிவைத்தார். கிளப் ஹவுஸை ராதாரவி தொடங்கி வைத்தார்.
விழாவில் ஆர்.கே.செல்வமணி, சத்யஜோதி தியாகராஜன், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
15 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் நவீன ஸ்டூடியோவை முதல்வர் கருணாநிதி ஜனவரி 14-ந்தேதி திறந்து வைப்பார் என்று ராமநாராயணன் தெரிவித்தார்.
சின்னத்திரை கலைஞர்களுக்கான வீடு கட்டும் செலவு உள்ளிட்டவற்றை சங்கமே ஏற்கிறது. அதே நேரம், திரைப்பட கலைஞர்களுக்கான வீடுகளுக்கு கணிசமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வீடுகளை வாங்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை திரைப்பட தொழிலாளர்கள்.
Post a Comment