‘அமெரிக்காவில் அம்மா வீட்டுச் சாப்பாடு’!

|

ad film shot in Hollywood in Tamil Title
அமெரிக்காவில் அம்மா வீட்டுச் சாப்பாடு-ஹாலிவுட்டில் ஒரு ‘விளம்பரம்’!
இப்படி ஒரு தலைப்பில் ஒரு படத்தை அமெரிக்காவின் போய் எடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அதாவது முழு நீள திரைப்படமல்ல, விளம்பரப் படம்!
சமையல் எண்ணெய் விளம்பரங்களில் முன்னோடி என்று சொல்லும் அளவுக்கு இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்துக்கு வித்யாசமான விளம்பரப் படங்களைத் தந்தவர் லேகா ரத்னகுமார். இந்த ‘அமரிக்காவில் அம்மா வீட்டுச் சாப்பாடு’ என்ற கான்செப்ட் விளம்பரத்தையும் அவர்தான் எடுத்துள்ளார்.
இந்த ஊர் நல்லெண்ணெய்க்கு அமெரிக்கா போய் படம் எடுக்க வேண்டிய அவசியமென்ன?
“பொதுவா இங்கிருந்து வேலைக்கு வெளிநாடு போற நம்மாளுங்க, கூடவே சமையல் எண்ணெய்ப் பாக்கெட்டுகளையும் சுமந்துபோகிறார்கள். அப்படிப் போகும்போது, செக்-இன்னில் அவற்றை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். எண்ணெய் போன்ற நீர்மப் பொருள்களுக்கு வெளிநாடுகளில் பெரும்பாலும் அனுமதி இல்லை.
இன்னொரு பக்கம் வெளிநாடுகளிலேயே இந்தப் எண்ணெய் கிடைத்தால் வியாபாரமும் புதிய பரிமாணம் பெறும் என்பதற்காக, இதயம் எண்ணெய் வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளோம். இதை சரியான முறையில், அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாகத்தான் இந்த விளம்பரத்தை எடுத்துள்ளோம்”, என்கிறார் லேகா ரத்னகுமார்.
இந்த விளம்பரத்தை எடுத்தது ஒரு பயனுள்ள சுவாரஸ்யமான அனுபவமாகவும் அமைந்துள்ளது ரத்னகுமாருக்கு. அமெரிக்காவில் ஹாலிவுட் கலைஞர்களுடன் இணைந்து இந்தப் படத்துக்காக பணியாற்றியிருக்கிறார். அடுத்து ஹாலிவுட்டில், தான் எடுக்கப் போகும் த்ரில்லர் பட ஷூட்டிங்குக்கு முன்னோட்டமாக இந்த அனுபவம் இருந்தது என்கிறார் லேகா.
நினைத்ததை விட மிகச் சிறப்பாக வந்திருக்கிறதாம் படத்தின் தரம். “ஷூட்டிங்குக்கு தேவையான எல்லாமே தி பெஸ்ட் எனும் வகையில் அங்கே கிடைத்தன. இங்கே என்றால் எல்லாத்துக்கும் செட் போடணும். அங்கே எல்லாமே ஒரிஜினல்தான். ஒரு அவுட்டோர் வீடு வேண்டும் என்றால், அதற்காகவே விதம் விதமாக அட்டகாசமாக கட்டி வைத்திருக்கிறார்கள். இதன் பலன், இந்தியாவில் எடுத்தால் ஆகிற செலவில் பாதிதான் எங்களுக்கு அமெரிக்காவில் ஆனது. நல்ல தரம், குறைந்த செலவு… வேறென்ன வேண்டும்” என்கிறார் லேகா ரத்னகுமார்.
இன்னும் சில தினங்களில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் விளம்பரப்படம் என்ற அறிவிப்போடு ஒளிபரப்பாகவிருக்கிறது இந்த ‘அமெரிக்காவில் அம்மா வீட்டுச் சாப்பாடு’!
 

Post a Comment