ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த ஏஎல்எஸ். வீரய்யா எழுதிய 'சினிமாவும் நானும்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கவிஞர் வாலி பேசியதாவது: வியர்வை சிந்தி உழைப்பவன்தான் சினிமாவில் வளர முடியும். காக்காய் பிடிப்பவன் வளர முடியாது. ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத துறை சினிமா. இதில் ஒழுக்கமாக இருப்பவர்கள் எஸ்.பி.முத்துராமன் போன்ற சிலர்தான். சினிமாவில் வெற்றியை மண்டைக்குள் கொண்டு போகக் கூடாது. தோல்வியை மனசுக்குள் கொண்டு போகக் கூடாது. எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.
திரையுலகைப் பொறுத்தவரை மழை விழுந்தாலும், மாடு சிறுநீர் கழித்தாலும் எந்த மாற்றமும் அடையாத பாறைபோல் உறுதியாக இருக்க வேண்டும். சினிமாவுக்கு வருவதற்கு நாடக அனுபவம் வேண்டும். சினிமாவே செல்லுலாய்டு வடிவிலிருக்கும் நாடகம்தான். ரயில்வே வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவர் நாகேஷ். 'உன் முகத்தை கண்ணாடியில் பார்த்திருக்கிறியா, எந்த தைரியத்தில் சினிமாவுக்கு வந்த?' என்று அவரிடம் நான் கேட்டிருக்கிறேன். பிற்காலத்தில் அவர் வருகைக்காக எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் 4 மணி நேரம் காத்திருந்த காலம் உண்டு.
'கண்ணதாசன் 4 ஆயிரம் பாடல்தான் எழுதி இருக்கிறார். நீங்கள்(வாலி) 15 ஆயிரம் பாடல் எழுதி இருக்கிறீர்களே..' என்று என்னிடம் சிலர் சொல்வதுண்டு. அவர் 54 வயது வரைதான் வாழ்ந்தார். எனக்கு 80 ஆகிவிட்டது. அவர் உயிரோடு இருந்திருந்தால் 20 ஆயிரம் பாடல்கள் எழுதி இருப்பார். அவர் எழுதிய 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற புத்தகம் வாழ்க்கை நெறிகளை விளக்கும். எனக்கு அதிகாரம் இருந்தால் அந்த புத்தகத்தை கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் பாட நூலாக்கி இருப்பேன். இவ்வாறு வாலி பேசினார்.


Source: Dinakaran
 

Post a Comment