சர்வதேச திரைப்பட விழா...முதல்வருக்கு அழைப்பு!

|

Karunanidhi
சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு, முதல்வர் கருணாநிதியை சந்தித்து திரையுலகினர் அழைப்பு விடுத்தனர்.
சென்னையில் 7வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடத்தப்படும் இந்த விழாவில், 40 நாடுகளைச் சேர்ந்த 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இவ்விழாவில் பங்கேற்குமாறு முதல்வர் கருணாநிதியை, திரைப்பட இயக்குநர் பி.வாசு, நடிகை குஷ்பு ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பி.வாசு, கடந்த வருடம் இந்த விழாவை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதேபோல் இந்த வருடமும் இந்த விழாவை துவங்கி வைக்க அவரை அழைத்துள்ளோம் என்றார்.
நடிகை குஷ்பு கூறுகையில், இந்த விழா முழுக்க முழுக்க திரைப்பட கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த விழாவைக் காண இவர்கள் கோவா போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதை சென்னையில் நடத்த முடிவு செய்து தற்போது விழா நடத்துகிறோம். இதை திரைப்பட கல்லூரி மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க சம்மேளத்தின் புதிய நிர்வாகிகள், அபிராமி ராமநாதன் தலைமையில் முதல்வரைச் சந்தித்துப் பேசினர்.
 

Post a Comment