கவிஞர் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் பாடல்களின் தொகுப்பான “வாலி – 1000′ என்ற நூலின் வெளியீட்டு விழா, கவிஞர் வாலியின் 80-வது பிறந்தநாள் விழா ஆகியவை சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகர் கமல்ஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் வாலி பேசிய ஏற்புரை:
கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்… என்ற எனது பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன்தான் காரணம். என்னைப் பாராட்ட இங்கே பலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி.
எனது மனைவி இறந்த முதல் ஆண்டு நினைவு நாளன்று ரஜினிகாந்தின் மகள் திருமணம் நடைபெற்றதால் என்னால் செல்ல முடியவில்லை. எல்லாம் வல்ல முருகன் அருளால் நீடூழி வாழ்க என்று அந்த மணமக்களை மனதால் வாழ்த்தினேன்.
கமல்ஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர். டி.கே. சகோதரர்கள் குழுவில் இருந்து கலை உலகுக்கு வந்தவர். மொழியை உச்சரிக்க தெரியாதவர்கள் அங்கிருந்து வர முடியாது. அந்த அளவுக்கு வரம் – சக்தி அவருக்கு உண்டு.
இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். படகோட்டி படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார். இங்குள்ளவர்கள் யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொண்டவர்கள் இல்லை. அதே போல் தோல்வியையும் மனதுக்குள் போட்டுக் கொள்ள கூடாது.
ரஜினி, கமல் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம் அவர்கள் வேர்களை மறக்காததுதான்.
எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்துக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் போட்ட பிச்சையே காரணம்.
20-ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை.
கமல், ரஜினி ஆகியோர் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருகிறார்கள். ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புக்கு சிறந்த உதாரணம்…”, என்றார்.
சோ பேச்சு:
துக்ளக் ஆசிரியர் சோ பேசுகையில், “காலம் கடந்தும் நிற்பவை வாலியின் கவிதைகள். இது அவருக்கு கடவுள் தந்த பரிசு. அதனால்தான் அவரால் ராமாயணத்தைப் பற்றியும் எழுத முடிகிறது. முக்காப்புல்லாவும் எழுத முடிகிறது. வாலியால் ஆன்மிகம் பற்றியும் பேச முடியும். நாத்திகர்களைப் பாராட்டவும் முடியும். அதில் ஒன்றும் தவறு கிடையாது.
கவிதை, பாடல்களை எழுதும் போது அதிலேயே அவர் ஐக்கியமாகி விடுகிறார். தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். அவரிடம் இன்னும் திறமைகள் கொட்டிக் கிடக்கிறது. கண்ணதாசன் காலத்திலும் புகழ் பெற்ற கவிஞராக இருந்தவர் வாலி. கண்ணதாசன் பாடலுக்கும் இவரின் பாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தது. அனைத்திலும் கவித்துவம் இருக்கும். எல்லோரையும் வாலியால் கவர முடியும்” என்றார்.
ரஜினி, கமலும் வாழ்த்திப் பேசினர்.
Post a Comment