சித்து ப்ளஸ்டூ தாமதம் ஏன்? – பாக்யராஜ் தந்த விளக்கம்

|


K Bagyaraj
நேரம் சரியில்லாவிட்டால் என்ன செய்தாலும் சரியாக வராது. எனது புதிய படமான சித்து ப்ளஸ் டூவும் அதனால்தான் தாமதமாகிவிட்டது போலிருக்கிறது, என்றார் இயக்குநர் கே பாக்யராஜ். மகன் சாந்தனுவை வைத்து பாக்யராஜ் இயக்கியுள்ள புதிய படம் சித்து பிளஸ்-2. நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். இந்த படம் குறித்து பாக்யராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியது:
பொதுவாக நான் படம் ஆரம்பிப்பதை பெரிதாக விளம்பரப்படுத்தியதில்லை. முடித்த பிறகுதான் வெளியில் தெரியும். இத்தனை வருடமும் அப்படித்தான் நடந்தது. ஆனால் இந்தப் படம் அதற்கு விதிவிலக்காகிவிட்டது.
சித்து பட வேலைகள் திட்டமிட்டபடி நடந்தன. ஆனாலும் தாமதமாகி விட்டது. இதை சொல்லும் போது எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன.
16 வயதினிலே படப்பிடிப்பின் போது பட வேலைகள் முடிந்து எங்கள் இயக்குனரும் இதர தொழில் நுட்ப கலைஞர்களும் சென்னைக்கு திரும்பினோம். வழியில் வேன் ரோட்டை விட்டு இறங்கி விபத்துக்குள்ளாகிவிட்டது. யாருக்கும் காயம் இல்லை. அதிலிருந்து மீண்டு சென்னை வந்து சேர்ந்த போது டயர் கழன்று ஓடியது. எல்லோரும் தப்பினோம். எங்கள் வண்டியில் இருந்து இறங்கி போன அப்துல்லா என்பவர் மட்டும் இன்னொரு விபத்தில் சிக்கி காயம் பட்டார். அவரை துரத்திய விதிதான் எங்களை பாடாய் படுத்தியது போலிருக்கிறது.
அது போலத்தான் இந்த படத்துக்கும் சில தாமதங்கள் எற்பட்டது. 16 வயதினிலே தடைகளை மீறி ஜெயித்தது போல் இப்படமும் பெரும் வெற்றி பெறும்.
முதல் படம் செய்த போது கூட நான் பயந்ததில்லை. இந்த படம் தாமதம் ஆனதால் லேசாக பயம் வருகிறது.
பொதுவாக என் படங்களில் தமிழ் பேச தெரிந்தவர்களைத்தான் கதாநாயகியாக்குவேன். என்னுடன் நடித்த ஊர்வசி, சரிதா, ஷோபனா போன்றோருக்கு தமிழ் தெரிந்ததால் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. அது போல் சித்து படத்தில் நடிக்கும் நாயகி சாந்தினிக்கும் தமிழில் பேசத் தெரியும் சிறப்பாக நடித்துள்ளார். ராஜேஷ், கஞ்சா கருப்பு, போன்றோரும் நடித்துள்ளனர். மகன், தந்தை சென்டி மெண்ட், காதல், போன்ற அம்சங்கள் இதில் இருக்கும்.
இது இளைஞர்களுக்கான படம் மட்டுமல்ல, இளைஞர்களுடன் குடும்பத்தினரும் தைரியமாக பார்க்கக்கூடிய நல்ல படம்,
 

Post a Comment