தமிழ் சினிமாவில் சமீபகாலமாக டைட்டில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. குழந்தைக்கு பெயரைப்போல படத்துக்கு டைட்டில் முக்கியமானது. சில படங்களால் டைட்டிலும், சில டைட்டில்களால் படங்களும் சிறப்பு பெற்றதுண்டு. அதனால்தான் டைட்டிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டைட்டிலுக்கு பெரிய அளவில் பஞ்சம் வந்ததில்லை. காரணம் அழுத்தமான ஆங்கில வார்த்தையை டைட்டிலாக வைத்து விடுவார்கள். இப்போது தமிழில் டைட்டில் வைத்தால்தான் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் டைட்டிலுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
கதைக்கு தொடர்புடைய அதே நேரத்தில் ரசிகர்களை கவரும் விதமான தமிழ் டைட்டில்களைத் தேடி பல படங்கள் இப்போதும் அலைந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு லட்சக் கணக்கில் சம்பாதிக்க, சிலர் டைட்டில் வியாபாரத்தில் குதித்துள்ளனர்.தயாரிப்பாளர் சங்கத்தில், ஒரு தயாரிப்பு நிறுவனத்தை பதிவு செய்ய, ஒரு லட்சம் ரூபாய் கட்டி சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். பட டைட்டிலுக்கு 500 ரூபாய் கட்டணம். ஆனால், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும், தயாரிப்பாளர் கில்டிலும் நிறுவன பதிவு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய். பட டைட்டிலுக்கான கட்டணம் 250 ரூபாய்க்கும் குறைவு.
இதனால் சில தயாரிப்பாளர்கள் கட்டணம் குறைவு என்பதால் இங்கு தங்கள் நிறுவனத்தை பதிவு செய்கிறார்கள். இன்னும் சிலர், தயாரிப்பாளர்கள் என்ற போர்வையில், இந்த இரண்டு இடங்களிலும் முக்கிய தலைப்புகளை பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். அதே டைட்டிலை வேறொரு தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யச் சென்றால், அந்த டைட்டிலை, நான் கில்டில் பதிவு செய்திருக்கிறேன். சேம்பரில் பதிவு செய்திருக்கிறேன். மீறி அந்த தலைப்பை படத்துக்கு நீங்கள் வைத்தால் வழக்கு தொடருவேன் என்று வந்து நிற்பார்கள். வேறு வழியில்லாமல் அந்த தயாரிப்பாளர் தலைப்பின் முக்கியத்துவத்துக்கேற்ப 50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை பணத்தைக் கொடுத்து, அந்த தலைப்பை பெறுகிற சூழ்நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சிலர் தலைப்பை பணம் கொடுத்து வாங்காமல், அதை ஒட்டி வேறொரு வார்த்தையை சேர்த்து தலைப்பு வைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக 'கண்மணி' என்று ஒரு படத்தின் டைட்டிலை ஒருவர் பதிவு செய்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதே டைட்டிலை வேறொருவர் விரும்புகிறார்; அவருக்கு பணம் கொடுத்து வாங்க விருப்பம் இல்லை என்றால் 'என் கண்மணி' என்று படத்தின் பெயரை வைத்துக் கொள்வார். இதில் 'என்' என்ற வார்த்தையை சிறிய அளவில் போட்டுக் கொள்வார். அல்லது 'கண்மணி செல்லம்' என்று வைத்து, 'செல்லம்' என்பதை சிறிதாக போட்டுக்கொள்வார்.
பழைய திரைப்படங்களின் பெயர்களை மீண்டும் வைக்கும் சீசனும் இப்போது ஆரம்பித்திருக்கிறது. பழைய படத்தின் பெயர்களை பத்து வருடங்களுக்கு பிறகு மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் விதிமுறை வைத்திருந்தாலும், தற்போது பெரிய நிறுவனங்கள் தயாரித்த, பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் நடித்த படங்களின் பெயர்களை பயன்படுத்திக் கொள்ள சம்பந்தபட்டவர்களிடமிருந்து தடையில்லா சான்று வாங்கி வரவேண்டும் என்ற விதிமுறையை கடைபிடித்து வருகிறார்கள்.
இதையும் மீறி சிலர் பழைய படங்களின் டைட்டில்களை பயன்படுத்துவதும் அதிகரித்திருக்கிறது. அல்லது அந்த தலைப்புகளில் சிறு மாற்றங்களை செய்து பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு 'தங்க மகன்' என்ற ¬ட்டிலை 'தங்க மகள்' என்று மாற்றி வைத்துக் கொண்டால் எதுவும் செய்ய இயலாது. 'இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு, நேரடி தமிழ் படங்களுக்கான டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும். ஆனால் அது சாத்தியமில்லை. இப்போது தயாரிப்பாளர் சங்கமும், சேம்பரும் இணக்கத்துடன் செயல்படுவதால் சேம்பரில் ஒருவர் டைட்டில் பதிவு செய்தால் அந்த தகவலை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தந்து விடுகிறார்கள்.
சேம்பரில் பதிவு செய்தாலும் படம் முடிவதற்குள் தயாரிப்பாளர் சங்கத்திலும் பதிவு செய்துவிட வேண்டும் என்று அவர்கள் கடிதம் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் கில்டில் அந்த நிலை இல்லை. 'சேம்பர் மற்றும் கில்டில் டப்பிங் படங்களையும், பிற மொழி படங்களையும் மட்டுமே பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு டைட்டிலுக்கு மேல் பதிவு செய்யக்கூடாது' என்று தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள விதிமுறையை மற்ற அமைப்புகளும் கடைப்பிடிக்க வேண்டும். டைட்டிலுக்கான புதுப்பிப்பு கால அவகாசத்தை ஒரு வருடம் என்பதை 3 மாதங்களாக குறைக்க வேண்டும். இவை சாத்தியமென்றால் டைட்டில் வியாபாரத்தையும், குழப்பத்தையும் தடுக்க முடியும்' என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.
Source: Dinakaran
Post a Comment