உயிரோட ‘சாவடிக்கலாமா’? – ஒரு ‘காமெடி’யின் வேதனை!

|

Benjamin
நான் நல்லா இருக்கேங்க… ஆனா அதுக்குள்ள நான் செத்துப் போயிட்டதா சொல்லி மாலையோட வீட்டுக்கு ஆளுங்க வராங்க. இந்த கொடுமைய எங்க போயி சொல்ல!, என்கிறார் காமெடி நடிகர் பெஞ்சமின்.

சேரனின் வெற்றிக் கொடி கட்டு படத்தில் வடிவேலுவை கண்டமேனிக்கு திட்டும் காமெடி காரெக்டரில் அறிமுகமானவர் பெஞ்சமின். தொடர்ந்து ஆட்டோகிராபில் சேரனின் நண்பனாகவும், திருப்பாச்சியில் விஜய்யுடன் தனி காமெடியனாகாவும் நடித்தார்.

தமிழ், தெலுங்கு உள்பட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சேலம் நகரைச் சேர்ந்தவர். இப்போதும் சேலம் அஸ்தம்பட்டி பாரதி நகரில் தாயார், மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை இவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இதனால் அதிரந்து போன உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாலையுடன் இவரது வீட்டுக்கு வந்து விட்டனர்.

அப்போது வீட்டில் நடிகர் பெஞ்சமின் இல்லை. அவரது தாயார் மட்டும் இருந்தார்.

இந்த வதந்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து செல்போனில் மகனை தொடர்பு கொண்டார். மறுமுனையில் அவரது மகன் பெஞ்சமின் பேசிய பிறகுதான் அவருக்கு மூச்சே வந்ததாம். வந்த அனைவருக்கும் மகன் நலமுடன் இருப்பதை சொல்லி அனுப்பி வைத்துள்ளார்.

இந்த வதந்தியை கிளப்பியது யார் என்று தெரியவில்லை.

இது குறித்து நடிகர் பெஞ்சமின் வருத்தத்துடன் இப்படிக் கூறுகிறார்:

அன்றைக்கு நான் எனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்திருந்தேன். நான் இறந்து விட்டதாகக் கூறி பலர் மாலையுடன் வீட்டுக்கு வந்ததாக எனது தாயார் கூறினார். எனக்கும் நேற்று காலை முதல் இன்று வரை இடைவிடாமல் போன்கள் வந்து கொண்டே இருக்கின்றன். தொடர்ந்து போனில் பேசிக்கொண்டே இருப்பதால் நேற்று இரவு நான் துங்கக் கூட முடியவில்லை.

இந்த வதந்தியை யார் கிளப்பியது என்று தெரியவில்லை. எனது தாயார் சின்னத்தாய் இருதய நோயாளி ஆவார். அவர் இந்த வதந்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல..!”, என்றார் அவர்.

 

Post a Comment