12/30/2010 3:09:58 PM
ஆயிரத்திரல் ஒருவன் படத்துக்குப் பிறகு விக்ரம், ஸ்வாதி நடிப்பில் க்ரைம் த்ரில்லர் படமொன்றை செல்வராகவன் தொடங்கினார். லடாக்கில் படத்தின் முதல் ஷெட்யூல் படமானது. ரமேஷ்பாபு தயாரித்த இந்தப் படம் பைனான்ஸ் உள்ளிட்ட சில காரணங்களால் தடைபட, தமிழ், தெலுங்கில் புதிய புராஜெக்ட் ஒன்றை செல்வராகவன் தொடங்கினார். இந்த இரு மொழி படத்தில் ராணா நடிப்பதாக இருந்தது.
சரித்திரப் பின்னணியில் உருவாக இருந்த இந்தப் படம் திடீரென கைவிடப்பட்டது. காரணம் தயாரிப்பாளர். இப்படி அனைத்து வாசல்களும் அடைபட, சற்றும் மனம் தளராத செல்வராகவன் ஏற்கனவே தொடங்கி பாதியில் கைவிட்ட இது மாலை நேரத்து மயக்கம் படத்தை தூசு தட்டியிருக்கிறார். இது மாலை நேரத்து மயக்கம் படப்பிடிப்பை தொடங்கி சில நாட்களிலேயே பேக்கப் சொன்னார் செல்வராகவன். கதையில் பல திருத்தங்கள். இப்போது இரண்டாம் உலகம் என்ற பெயரில் அதே கதை பல மாற்றங்களுடன் உருவாக உள்ளது.
தனுஷ், ஆண்ட்ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு முதலில் இசையமைப்பதாக இருந்தது ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் தற்போது அவரது இடத்தை நிரப்பப் போகிறவர் யுவன் ஷங்கர் ராஜா.
செல்வராகவன், யுவன் இருவரும் கருத்து வேறுபாட்டால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இணைந்து பணியாற்றவில்லை. இது இந்தக் கூட்டணியின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இந்தப் பிரிவுக்குப் பிறகு நா.முத்துக்குமாரை தவிர்த்த செல்வராகவன் வைரமுத்துக்கு வாய்ப்பளித்தார்.
யுவன், செல்வா இணைந்ததால் இந்தக் கூட்டணியில் மீண்டும் நா.முத்துக்குமார் இணைய வாய்ப்புள்ளது.
Post a Comment