பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்

2/21/2011 12:06:03 PM

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவின் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். இவரது தெளிவான தமிழ் உச்சரிப்பு ரசிகர்களை ஈர்த்த விஷயங்களில் ஒன்று. மலேசியாவில் பிறந்த இவர், சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தார். 'டெல்லி டு மெட்ராஸ்' படத்துக்காக முதல் பாடல் பாடினார். ஆனால் அவரை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியது, 'பதினாறு வயதினிலே' படத்தில் இடம்பெற்ற 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…' பாடல். பிறகு, 'கோடைகால காற்றே', 'அள்ளித் தந்த பூமி', 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி', 'பொன்மானைத் தேடி நானும்…', 'பூங்காத்து திரும்புமா' உட்பட இவர் பாடிய ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவரது குரல் ரஜினிக்கு பொருத்தமாக இருந்ததால், அவர் படங்களில் அதிகமாக பாடி வந்தார். 85 திரைப்படங்களில் நடித்துள்ள மலேசியா வாசுதேவன், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார். ஒரு வாரத்துக்கு முன், அவருக்கு நுரையீரல் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். நேற்று நண்பகல் ஒரு மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை சாலிகிராமம் கோதண்டபாணி ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்களுடன், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 3 மணிக்கு போரூரில் உடல் தகனம் செய்யப்படுகிறது. மலேசியா வாசுதேவனுக்கு உஷா என்ற மனைவியும், யுகேந்திரன் என்ற மகன், பிரசாந்தினி, பவித்ரா ஆகிய மகள்கள் உள்ளனர்.


Source: Dinakaran
 

Post a Comment