4/28/2011 9:58:00 AM
நடிகர் கார்த்தி - ஈரோடு ரஞ்சனி திருமணம் ஜூலை 3ம் தேதி சென்னையில் நடக்கிறது. நடிகர் சிவகுமார் - லட்சுமி தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள். மூத்த மகன் நடிகர் சூர்யா. அவர் நடிகை ஜோதிகாவை காதலித்து மணந்தார். அவர்களுக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் உள்ளனர்.சூர்யாவின் தம்பி 'பருத்தி வீரன்' கார்த்தி. சென்னை கிரசன்ட் கல்லூரியில் பி.இ முடித்தார். அமெரிக்காவில் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் படிப்பில் எம்.எஸ் பட்டம் பெற்றார். சினிமா ஆர்வம் காரணமாக மணிரத்னம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் அமீர் படத்தில் அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்து பிரபலம் ஆனார். கார்த்தி பெற்றோர் அவருக்கு பெண் தேடி வந்தனர். ரஞ்சனி என்பவரை தேர்வு செய்துள்ளதாக நேற்று தெரிவித்தனர். ரஞ்சனியின் பெற்றோர் சின்னசாமி - ஜோதி மீனாட்சி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ரஞ்சனி சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். திருமணம் ஜூலை 3ம் தேதி சென்னையில் நடக்கிறது. வருங்கால மனைவி குறித்து தினகரன் நிருபர் கேட்டபோது கார்த்தி சொன்னார்: கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார். முதல்முறை ரஞ்சனியை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். அட்லான்டிக் கடலும் பசிபிக் கடலும் சந்திக்கும் பகுதியிலுள்ள தஹிட்டி தீவுக்கு தேனிலவு போகலாம் என்று நினைத்திருக்கிறோம். இவ்வாறு கார்த்தி கூறினார்.
Post a Comment