அஜீரண கோளாறு : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ரஜினி!

|

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீரண கோளாறு : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் ரஜினி!

4/30/2011 9:49:57 AM

நடிகர் ரஜினிகாந்த் அஜீரண கோளாறு காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி நேரில் பார்த்து நலம் விசாரித்தார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம், ராணா. இப்படத்தின் தொடக்க விழா, சென்னை ஏவி.எம் ஸ்டுடியோவில் நேற்று காலை நடந்தது. இதில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ரஜினிகாந்த் சோர்வாக இருந்தார். மதியம் 12.30 மணி வரை ராணா படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், அப்போது கொடுக்கப்பட்ட உணவை சாப்பிட்டார்.

உடனே அவருக்கு கடுமையான வயிற்று வலியும், அதை தொடர்ந்து வாந்தியும் ஏற்பட்டது. மேலும் சோர்வடைந்த அவர், மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு ரஜினிகாந்தை பரிசோதித்த டாக்டர்கள், நண்பகல் 1.45 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பிறகு அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ரஜினி மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா அஸ்வின் வந்தனர்.  

ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து லதா கூறியதாவது: உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால், மருத்துவமனைக்கு செல்வீர்கள் அல்லவா? அதுபோல்தான் அவரும் (ரஜினிகாந்த்) சிகிச்சை பெற வந்துள்ளார். இந்த விஷயம் இவ்வளவு பெரிய பரபரப்பாகி விட்டது என்பதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. நேற்று நடந்த ராணா படப்பிடிப்பில் அவர், அங்கு ஏதோ சாப்பிட்டு இருக்கிறார்.

அது அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஃபுட் பாய்ஷன் ஆகிவிட்டது. வாந்தியும் எடுத்திருக்கிறார். எனவே, இசபெல் ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்துள்ளோம்.
இப்போது அவர் நலமாக இருக்கிறார். முன்பைவிட தெம்பாக இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் அவர் வீட்டுக்கு செல்லலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் டாக்டர் சி.வி.கிருஷ்ணசாமி, டாக்டர் கிஷோர் இருவரும் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்தனர்.  பிறகு டாக்டர் கிஷோர், நிருபர்களிடம் கூறியதாவது: ரஜினிகாந்துக்கு வயிற்றில் அசிடிட்டி பிரச்னை ஏற்பட்டது. வாந்தியும் எடுத்து இருக்கிறார். இதனால், உடலில் நீர்ச்சத்து குறைந்து விட்டது. எனவே, அவருக்கு தரமான சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உடனடியாக அவருக்கு இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, உரிய மருந்து, மாத்திரைகள் அளிக்கப்பட்டது. தீவிர கண்காணிப்பில் இருப்பதால், அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவரது இதய துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம் சீராக உள்ளது. சிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.

நலமாக இருக்கிறார்

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அறிந்த முதல்வர் கருணாநிதி, நேற்று மாலை 5.45 மணியளவில், இசபெல் மருத்துவமனையில் உள்ள தீவிர இருதய சிகிச்சைப் பிரிவுக்கு நேரில் வந்தார். அவருடன் கனிமொழியும் வந்தார். வாசலில் நின்றிருந்த ஐஸ்வர்யா தனுஷிடம், 'அப்பாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?' என்று விசாரித்த முதல்வர், பிறகு ரஜினிகாந்த் இருந்த அறைக்கு சென்று, அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பிறகு வெளியே வந்த அவரிடம், ரஜினிகாந்த் எப்படி இருக்கிறார் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாநிதி, 'அவருக்கு அஜீரண கோளாறு. இப்போது நலமாக இருக்கிறார். நன்றாக பேசுகிறார்' என்றார். பிறகு அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.




 

Post a Comment