4/27/2011 10:24:45 AM
சஞ்சய்ராம் தயாரித்து இயக்கி உள்ள படம், 'பூவா தலையா'. இந்தப் படம் வரும் 29ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இதில் நாயகியாக நடித்துள்ள ஷெரீன் தனக்கு 5 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி தர வேண்டியுள்ளது. அதை வசூலித்து தரும்படி நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஷெரீனின் அம்மா யசோதரா கூறியதாவது: இயக்குனர் சஞ்சய்ராம் 'பூவா தலையா' படத்தில் நடிக்க கேட்டபோது நாங்கள் 15 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டோம். அவ்வளவு பணம் தரமுடியாது என்று, 9 லட்சம் தருவதாக சொன்னார். ஒப்புக் கொண்டோம். முதல் தவணையாக 4 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஷெரீன் நடித்தார். இன்னும் 5 நாள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது, அதை முடித்த பிறகு மீதி தருவதாகச் சொன்னார்கள். அதன் பிறகு படப்பிடிப்புக்கு அழைக்கவும் இல்லை. மீதிப் பணத்தை தரவும் இல்லை. இப்போது படம் வெளிவரப்போவதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். சம்பள பாக்கியை கேட்டால் தொலைபேசி இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். இதுபற்றி, நடிகர் சங்கத்தில் ஏற்கனவே புகார் செய்திருந்தோம். இப்போது மீண்டும் புகார் கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment