திருப்பதியில் இசை பல்கலைக்கழகம்: இளையராஜா-மோகன்பாபு அறிவிப்பு

|

Tags:


திருமலை: திருப்பதியில் இசை பல்கலைக்கழகம் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இசை அமைப்பாளர் இளையராஜாவும், நடிகர் மோகன்பாபுவும் தெரிவித்தனர்.

சாமி தரிசனம்

பிரபல இசை அமைப்பாளர் இளையராஜாவும், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வந்த இருவரையும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்றனர்.

அங்கு இருவரும் ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்ததும் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் இருவருக்கும் லட்டு மற்றும் தீர்த்தப் பிரசாதங்களை கோவில் அதிகாரிகள் அவர்களுக்கு வழங்கினர்.

பின்னர் கோவிலை விட்டு வெளியே வந்த இளையராஜாவும், மோகன்பாபுவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

இசை பல்கலைக்கழகம்

இசை பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது எங்களது நோக்கமாக இருந்தது. அதன்படி திருப்பதியில் உள்ள ஸ்ரீவித்யா நிகேதன் பல்கலைக்கழகத்தில் (நடிகர் மோகன்பாபுவுக்கு சொந்தமானது) காலியாக உள்ள இடத்தில் இசைக்கு என்று ஒரு பல்கலைக்கழகம் விரைவில் தொடங்கப்படும்.

இந்தியாவில் இசைக்கென கல்லூரி மட்டுமே உள்ளது. பல்கலைக்கழகம் ஏதும் இல்லை. அந்த குறையை இந்த பல்கலைக்கழகம் தீர்த்து வைக்கும். இந்த இசை பல்கலைக்கழகத்துக்கு இருவரும் சேர்ந்து வேண்டிய உதவிகளை செய்வோம்," என்றனர்.
 

Post a Comment