5/20/2011 12:20:08 PM
தப்பித்தவறி கூட எந்த மாக்காணும் கேள்வி கேட்டுவிடக் கூடாதல்லவா? பல மொழி, பல இன மக்கள் வாழும் நம் நாட்டில் எப்படி அனைவரும் ஒரே ரசனையுடன் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்ற மில்லியன் டாலர் வினாவை வினவி விடக் கூடாதல்லவா? அதற்குத்தான் இந்த 'ரெடி'மேட் பதில். ஆனால், பாருங்கள். மூன்றாண்டுகளுக்கு முன் ஆந்திரக் கரையோரமுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மல்லாக்க படுத்தபடி ஒரு கதையை கோபி மோகன் உருவாக்கியபோது, இந்திய தேச ஒற்றுமைக்கே அத்தாரிட்டியாக அக்கதை விளங்கப் போகிறது என சத்தியமாக எண்ணவில்லை. இயக்குநர் சீனு வைத்யலாவின் வலக் கை, இடக் கை என சகல கைகளாகவும் இவர் விளங்குவதால், இவரது கதை சுபயோக சுப முகூர்த்தத்தில் ராம் - ஜெனிலியா நடிக்க 'ரெடி' படமாக உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு என்ன நடந்தது என்று கதாசிரியர் கோபி மோகனுக்கே புரியவில்லை. ஆனால், வங்கிக் கணக்கு மட்டும் மூன்று போக விளைச்சலை இன்றுவரை தந்துக் கொண்டிருக்கிறது.
பொதுவாக தெலுங்கில் சதமடித்த படங்களை கமா, ஃபுல்ஸ்டாப் மாறாமல் கன்னடத்தில் ரீமேக் செய்வார்கள். அப்படித்தான் 'ரெடி' படமும் புனித் ராஜ்குமார் - ப்ரியாமணி நடிக்க 'ராம்' ஆக உருமாறியது. பம்பர் வெற்றியை ருசித்தது. அப்போது கூட கோபி மோகன், இது எப்போதும்போல் நடக்கும் ஒரு நிகழ்வுதான் என்பதுபோல் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால், அதேகதை 'உத்தமபுத்திரன்' ஆக தனுஷ் - ஜெனிலியா நடிக்க தமிழில் அவதாரம் எடுத்து வசூலை அள்ளியபோது, ஆடித்தான் போனார். விளையாட்டாக தான் உருவாக்கிய கதை, ஒவ்வொரு மொழி மைதானத்திலும் கரகோஷத்துக்கு மத்தியில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்கப் பார்க்க கோபி மோகனுக்கு பரவசமாக இருந்தது. அந்த சந்தோஷம், அதே கதை, இந்தியில் 'ரெடி' என்னும் பெயரில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டபோது உச்சத்தை அடைந்தது.
இப்படி புல்லாகி, புழுவாகி, பறவையாகி, பாம்பாகி, பல் மிருகமாகி... இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த ரசனைக்கு உதாரணமாகத் திகழும் 'ரெடி'யின் கதை, சுவாரசியமானது. காதலர்களுக்கு உதவுவதற்காகவே பிறவி எடுத்திருக்கும் கதாநாயகன், தவறுதலாக முகம் தெரியாத ஒரு பெண்ணை திருமண மண்டபத்திலிருந்து கடத்துகிறான். தன் சொத்தை அபகரிப்பதற்காக திட்டமிட்டு ரவுடிக்கு திருமணம் செய்து வைக்க முயலும் இரு மாமன்களிடமிருந்தும் தப்பிக்க, இந்த வாய்ப்பை அந்தப் பெண் பயன்படுத்திக் கொள்கிறாள். பிறகுதான் நாயகனுக்கு, தான் தவறுதலாக வேறொரு பெண்ணை கடத்திவிட்டோம் என்பது புரிகிறது. மெல்ல மெல்ல அந்தப் பெண்ணுக்கும், நாயகனுக்கும் காதல் மலர்கிறது. அந்தப் பெண்ணின் மாமன்களை திருத்த நாயகனின் குடும்பமே களத்தில் இறங்குகிறது. மாமன்களின் ஆசியுடன் அப்பெண்ணை நாயகன் மணந்தானா என்பது க்ளைமாக்ஸ்.
வயிறு புண்ணாகும் அளவுக்கு இக்கதையை காமெடி காக்டெயிலில் பரிமாறி இருப்பதுதான் இதன் ப்ளஸ். இந்தியில் தயாராகும் இப்படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். 'தபங்' படத்துக்கு பின் மோஸ்ட் 'வாண்டட்' ஆக இருக்கும் சல்மானின் மார்க்கெட்டை இப்படம் இன்னும் பலப் படிகள் உயர்த்தும் என்கிறார்கள். நாயகியாக நடித்திருப்பவர், 'நம்மூர்' அசின்.
இயக்கியிருப்பவர், அனீஸ் பாஸ்மி. இந்திப் படவுலகின் காமெடி கிங் என கொண்டாடப்படும் அனீஸ், மூலக் கதையிலிருக்கும் நகைச்சுவையை விட, கூடுதலாக காமெடியை கலந்திருக்கிறாராம். இசை, ப்ரீத்தம் என்றாலும் 'ஆர்யா 2' தெலுங்கு படத்தில் இடம் பெற்ற 'ரிங்கா ரிங்கா...' பாடலை கொஞ்சம் டிங்கரிங் செய்து 'தின்கா சிக்கா...' என மாற்றியிருக்கிறார்கள். உண்மைதான். இந்திய ரசனைக்கு எடுத்துக்காட்டு இந்த 'ரெடி'மேட் பதில்தான்.
Post a Comment