ராணா படமாவது, காணா படமாவது என்று நடிகர் வடிவேலு நக்கலாக கூறியதால் ரஜினி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். வடிவேலுவைக் கண்டித்து ஸ்ரீரங்கம் பகுதியில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.
நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்து ஊர் ஊராகப் போய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் நடிகர் வடிவேலு. இந்தப் பிரசாரத்தின்போது திமுக அரசின் சாதனைகளை உணர்ச்சிவசப்பட்டு மக்களிடம் விளக்கிப் பேசிய அவர், எந்தத் தகுதியில் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொள்கிறார், அவர் முதல்வராக என்ன தகுதி உள்ளது என்பது குறித்து விமர்சித்துப் பேசினார்.
வடிவேலுவின் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தினாலும் கூட பெருவாரியான மக்கள் அவரது பேச்சை ரசித்துக் கேட்டனர். விஜயகாந்த் குறித்த மறு சிந்தனைக்கும் அவர்கள் தள்ளப்பட்டார்கள்.
ஆனால் வடிவேலுவின் பேச்சு ரஜினி தரப்புக்கு ரசிப்பைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரஜினியின் புதிய படமான ராணாவில் வடிவேலுவைப் போடவிருந்த முடிவை அவர்கள் விலக்கிக் கொண்டு அவருக்குப் பதில் கஞ்சா கருப்புவைப் போட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் வடிவேலுவிடம் கேட்டபோது, ராணாவா இருந்தாலும் சரி, காணாவாக இருந்தாலும் சரி, என்னை யார் நீக்கினாலும் அதுகுறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. திமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் போய்ச் சொன்னேன். இதற்காக என்னை சினிமாவிலிருந்தே நீக்க முயற்சித்தாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்றார்.
மேலும் அவர் மே 13க்குப் பிறகு எல்லாம் மாறும் பாருங்க என்றும் தனது பாணியில் கூறினார் வடிவேலு.
வடிவேலுவின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் பகுதி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில்,
வண்மையாக கண்டிக்கிறோம் திரையுலகில் 3 தலைமுறைகளை வென்ற முடிசூடா மன்னன் எங்கள் அன்பு தலைவர் சூப்பர் ஸ்டாரின் ராணா படத்தை பற்றி தரக்குறைவாக பேசிய ‘‘காமொடி கைப்புள்ளையை’’ வன்மையாக கண்டிக்கிறோம். இவண் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் என கூறியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகி திமுகவினரை பெரும் அப்செட்டுக்குள்ளாக்கியது. குறிப்பாக முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை ரஜினிகாந்த் முன்னிலையிலேயே சொல்லி பெரும் வருத்தப்பட்டார். இதனால் கருணாநிதியுடன் அமர்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்த ரஜினி தர்மசங்கடத்துக்குள்ளாகினார்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் தொடங்கியது முதல் திமுகவின் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ள வடிவேலு, ரஜினி காந்த் படத்தை படு துணிச்சலாக விமர்சனம் செய்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English summary
Rajinikanth fans have raised their voice against Actor Vadivelu, who slammed Raana movie for sacking him from the film. Rajini fans have pasted condemn posters in Sri Rangam.
Post a Comment