வாக்காளர்களை குற்றம் சாட்டி குஷ்பு பேச்சு-வக்கீல்கள் கண்டனம்

|

Tags:



திமுகவுக்கு இது தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் இதுதோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சாபம் விடுவது போல நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குஷ்பு அடங்க வேண்டும் என்று விந்தியா காட்டமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அதிமுக வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை.

தேர்தல் முடிவுகள் மக்களுக்கு தோல்வி என்று கூறி, 202 தொகுதி மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, பேட்டி கொடுத்த, நடிப்பில் காலம் சென்ற நடிகை குஷ்புவை மிக வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

Post a Comment