5/30/2011 10:51:45 AM
நடிகர் விஜயகுமார் மகள் நடிகை வனிதா. இவரது முதல் கணவர் ஆகாஷ். இவர்களது மகன் ஸ்ரீஹரி (9). முதல் கணவரை பிரிந்த வனிதா, ஆனந்தராஜ் என்பவரை 2வது திருமணம் செய்தார். இதனால், குழந்தை யாரிடம் இருப்பது என்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ''வாரத்தில் 5 நாட்கள் ஆகாசுடனும், 2 நாட்கள் வனிதாவுடன் இருக்க வேண்டும்'' என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உத்தரவுப்படி ஆகாஷ் நடந்து கொள்ளவில்லை என்று வனிதா புகார் கூறி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார் வனிதா. அவரிடம் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கமிஷனர். பின்னர், வெளியே வந்த வனிதா "மகன் ஸ்ரீஹரி கிடைக்கும் வரை தண்ணீர் கூட அருந்தமாட்டேன்" என்று அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இணை கமிஷனர் சங்கர் நேற்று விசாரணை நடத்தினார். முதலில் ஆகாஷிடமும் பின்னர் வனிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், இருவரையும் ஒரே அறையில் ஒன்றாக வைத்து ஆலோசனை வழங்கினார். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. குழந்தை ஸ்ரீஹரி தனது தாயான வனிதாவுடன் செல்ல விரும்பவில்லை. இதனால், குழந்தை மீண்டும் ஆகாஷிடமே ஒப்படைக்கப்பட்டது.
இது நாடகம்தான்!
விசாரணைக்கு செல்லும் முன்பு வனிதா கூறுகையில், ''ஸ்ரீஹரி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். அவனுக்கு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழில் கடிதம் எழுதி வைத்திருப்பதாக கூறப்படுவது, என்னுடன் ஸ்ரீஹரி வந்து விடக்கூடாது என்பதற்காக சிலர் ஆடும் நாடகம்தான்'' என்றார்.
ஆகாஷின் பின்னணி?
வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜ் கூறுகையில், ''நான் பிரிந்து சென்றால்தான் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைப்பார்கள் என்றால், வனிதாவை விட்டு பிரிந்து செல்ல தயாராக இருக்கிறேன். ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையை வனிதாவிடம் ஒப்படைக்க மாட்டார்கள். ஆகாஷின் பின்னணியில் இருந்து நடிகர் விஜயகுமார் செயல்படுகிறார்'' என்றார்.
வீடியோவில் பதிவு
மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை, பிற்பகல் 3 மணி வரை நீண்டது. விசாரணை நடத்தப்பட்ட விதம், அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. விசாரணை குறித்து எந்த விதமான வதந்திகளும், தவறான தகவல்களும் பரவி விடக்கூடாது என்பதற்காக, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இதுபோன்று செயல்பட்டதாக கூறப்படுகிறது.
Post a Comment