ரஜினி உடல்நிலை குறித்து அண்ணன் சத்யநாராயணா ராவ் விளக்கம்

|

Tags:


சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மூத்த சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிக்கு நிமோனியா, கிட்னி கோளாறு எதுவும் இல்லை. அவருக்கு நோய்த் தொற்று மட்டும்தான், என அவர் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சமீபகாலமாக ஆல்கஹால் உட்கொள்வதை ரஜினிகாந்த் குறைத்துவிட்டார். அதனாலேயே அவருக்கு நுரையீரல் மற்றும் கல்லீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டது. எனினும் அவருக்கு நிமோனியாவோ அல்லது கிட்னி பாதிப்போ இல்லை என சத்யநாராயண ராவ் தெரிவித்தார்.

பெங்களூரில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ரஜினியின் உடன் பிறந்த அண்ணன். அவரை தனது தந்தைக்கு சமமாக மதிப்பவர் ரஜினி. இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி பேசிக்கொள்வர். ரஜினி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சென்று அண்ணனைப் பார்த்து வருவது வழக்கம். பல்வேறு விவகாரங்களில் அவரது ஆலோசனைகளையும் கேட்பார். ரஜினியின் பெற்றோர் பெயரில் உருவாகியுள்ள அறக்கட்டளையில் தலைவராக இருப்பவரும் சத்யநாராயணாராவ்தான்.

ரஜினியின் உடல்நிலை குறித்து அவர் கூறுகையில், "நுரையீரல் நோய்த்தொற்று முழுமையாக குணமடைய ரஜினிகாந்த் மேலும் சில தினங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிவரும்.

திரைத்துறையில் மது உட்கொள்வது, புகைப்பது சாதாரணம்தான் என்றாலும் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக அதை வெற்றிகரமாக குறைத்திருந்தார். கடந்த சில மாதங்களாக அவர் மதுப அருந்துவதும் இல்லை. அதனாலேயே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம்.

ஆல்கஹால் உட்கொள்வதை நிறுத்தினால் வாந்தி, உடல் பலவீனம் அடைதல், காய்ச்சல், சுவாசப் பிரச்னை போன்ற அறிகுறிகள் பொதுவாக காணப்படும் என மருத்துவர்களும் சொல்கிறார்கள். ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இந்தப் பிரச்னைகளே முதன்மைக் காரணங்களாக இருக்கும். இதில் சில பக்க விளைவுகள்தான் ரஜினிக்கு மிகவும் பிரச்சினையைத் தந்திருக்கும் என நினைக்கிறேன்.

மேல் சிகிச்சைக்காக ரஜினியை அமெரிக்கா அழைத்துச்செல்லும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை. அதே போல 6 மாதங்கள் ரஜினி படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுவதும் உண்மையல்ல. தம்பி விரைவில் நலமுடன் தனது பணிகளை தொடர்வார்", என விளக்கம் அளித்தார்.
 

Post a Comment