ஆழியாறு அணையை மாசுபடுத்தும் பிரபுதேவா குழு: பொதுமக்கள் அதிருப்தி

|

Tags:


ஆனைமலை: ஆழியாறு அணையில் பிரபுதேவா படக்குழுவினர் ரசாயனத்தைக் கலந்து நீரை மாசுப்படுத்தவதாக அதிகாரிகளும், பொது மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

பிரபுதேவா இயக்கும் படம்

விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படத்தினை பிரபுதேவா இயக்கி வருகிறார். ஆனைமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் படபிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் பாடல் காட்சி, ஆழியாறு அணை ஜீரோ பாயிண்ட்டில் நேற்று நடந்தது. இதற்காக அணைக்குள் செட் போட்டுள்ளனர்.

கொட்டப்பட்ட ரசாயனம்

முதலில் அணை நீரில் ரசாயனம் ஊற்றப்பட்டு தண்ணீர் பச்சை நிறமாக மாற்றப்பட்டது. பிறகு அந்த நீரில் ஆடு, மாடு, மீன், கொக்கு உருவங்கள் வரையப்பட்ட அட்டைகள் நடப்பட்டன. அணைக்குள் சவுக்கு கட்டைகளை நட்டு, மணல் மூட்டைகள் போடப்பட்டு மேடாக்கப்பட்டு அதன்பின்னரே படப்பிடிப்பு துவங்கியது.

பயணிகளுக்கு அனுமதி இல்லை

அணையின் மேல் பகுதியில் 20-க்கும் அதிகமான வாகனங்களை வரிசையாக நிறுத்தி, சுற்றுலாப் பயணிகள் யாரையும் அணையைப் பார்க்க அனுமதிக்காததால் அவர்கள் எரிச்சல் அடைந்தனர். ரசாயனத்தை அணைக்குள் கொட்டி தண்ணீரின் நிறத்தை மாற்றுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்துவோரும், வன விலங்குகளும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அனுமதியை மீறும் படக்குழுவினர்கள்

'அணைக்கும், அணையில் உள்ள நீருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் படமெடுக்க வேண்டும்' என்ற நிபந்தனைகளுக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அனுமதி கிடைத்ததும் படக்குழுவினர் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுவிடுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பிற்கென சென்னை தலைமையிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

படக்குழுவினர் சென்னையில் அனுமதி பெற்று வந்துவிடுவதால், இங்குள்ள அதிகாரிகளால் எந்த கட்டுப்பாடும் விதிக்க முடிவதில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
 

Post a Comment