தேசிய விருது பெற்ற தமிழக நடிகர்-நடிகைகளுக்கு விஜயகாந்த் வாழ்த்து

|

Tags:


சென்னை: தேசிய விருது பெற்ற தமிழக நடிகர்-நடிகைகளுக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

58-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது `ஆடுகளம்' படத்தில் நடித்த நடிகர் தனுசுக்கும், சிறந்த நடிகைக்கான விருது `தென்மேற்கு பருவக்கற்று' படத்தில் நடித்த நடிகை சரண்யாவுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் "கள்ளிக்காட்டில் பிறந்த தாயே'' என்ற பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருது `மைனா' படத்தில் நடித்த நடிகர் தம்பிராமையாவுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது 'நம்ம கிராமம்' படத்தில் நடித்த நடிகை சுகுமாரிக்கும் கிடைத்துள்ளது.

நடிகர்-நடிகைகளுக்கு வாழ்த்து

இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ்த்திரையுலகத்திற்கு மேலும் மேலும் பல விருதுகள் கிடைத்திட இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.
 

Post a Comment