5/30/2011 10:54:07 AM
சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நலமாக இருப்பதாக அவரது மருமகனும் நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 29ம் தேதி ÔராணாÕ படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அன்றே வீடு திரும்பினார். பின்னர், இம்மாதம் 4ம் தேதி மீண்டும் அதே மருத்துவமனையில் நுரையீரல் பிரச்னை மற்றும் அலர்ஜிக்காக சேர்க்கப்பட்டு சில நாட்கள் சிகிச்சை பெற்றார்.
பின்னர், போரூர் ராமச¢சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டதால், அங்கு அவருக்கு ரத்தத்தை சுத்தம் செய்யும் 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் தனிமை வேண்டியும், மேல் சிகிச்சைக்காகவும் டாக்டர்களின் அறிவுரைப்படி, சிங்கப்பூர் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு ஐஸ்வர்யா, சவுந்தர்யா, தனுஷ், அஸ்வின், ரஜினியின் உதவியாளர் சுப்பையா மற்றும் டாக்டர் ஒருவருடன் சிங்கப்பூர் சென்றார் ரஜினிகாந்த். அங்குள்ள புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில், ரஜினி சேர்க்கப்பட்டார். ரஜினியின் மனைவி லதா நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார்.
மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நேற்று டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் சிங்கப்பூர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ரஜினி நலமாக இருப்பதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். ரஜினிக்கு விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிகிறது.
Post a Comment