5/19/2011 10:07:11 AM
சென்னை : சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.
ஆனால், நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு 7வது மாடியில் உள்ள தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது. இந்த சுவாச பிரச்சனையால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து நுரையீரலில் தேங்கியுள்ள நீரை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் சிறுநீரகங்களிலும் பிரச்சனை ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் : மருத்துவர்கள் தகவல்
இந்நிலையில், சுவாசக் கோளாறை குணப்படுத்த ஐசியூ வில் ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொண்டு ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரஜினிக்காக ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை!
ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரிலிருந்து ரசிகர்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம் : ரசிகர்களுக்கு கோரிக்கை
ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. குணமடைந்து வரும் ரஜினி விரைவில் ரசிகர்களை சந்திப்பார் என்று உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் வருவதை தடுக்க மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் குணமடைய திரூப்பூரில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை
ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். திருப்பூரில் "மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்" இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். தற்போது நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.
ரஜினிகாந்த் வருவார்… திரையுலகை ஆள்வார்! – கவிஞர் வைரமுத்து
“ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வருவார். திரையுலகை ஆள்வார். நவீன மருத்துவத்தின் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது,” என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். மேலும், உணர்ச்சி வசப்பட்டு எந்த ரசிகரும் வதந்திகளை நம்பி தவறான முடிவுக்கு தள்ளப்பட்டு விட வேண்டாம். ஏனென்றால் ரஜினியின் உயிரைப் போலவே உங்கள் உயிரும் உயர்ந்தது. உடல்களில்தான் பேதம் உண்டு. உயிர்களில் பேதம் இல்லை. எனவே மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிக்கையை மட்டுமே நம்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
ரஜினிக்காக தீபிகா படுகோன் பிரார்த்தனை!
ரஜினி சாருடன் சேர்ந்து நான் இன்னும் நடிக்கவில்லை. அந்த நாளை நான் மிகுந்த பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று, ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன் என நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
Post a Comment