5/28/2011 10:20:36 AM
நடிகர் ரஜினிகாந்தின் உடல் நலம் குறித்த தேவையில்லாத செய்திகளை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். லதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரஜினிகாந்த் நலமுடன் உற்சாகமாகவும் உள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், உடல் நலத்தை கவனித்துக் கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம். அவரைப் பற்றி தேவையில்லாத செய்திகள் வந்து கொண்டிருப்பதை கண்டு தாங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சீக்கிரம் திரும்புவேன் கண்ணா...
நேற்று இரவு 9.50 மணிக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விமான நிலையத்துக்கு ரஜினிகாந்த் அழைத்துச் செல்லப்பட்டார். நள்ளிரவில் விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக, ஆடியோ அறிக்கை மூலம் ரஜினியின் பேச்சு வெளியிடப்பட்டது. அதில் ரஜினியின் பேச்சு: ஹலோ நான் ரஜினிகாந்த் பேசுறேன்..(சிரிப்பு). ஹேப்பியா போய்ட்டு வந்துகிட்டு இருக்கேன். எவ்வளவு சீக்கிரமா வரணுமோ அவ்வளவு சீக்கிரமா வந்துருவேன் ராஜாக்களா.. பணம் வாங்கிட்டு நடிக்கிற என்மேலே இவ்வளவு அன்பு காட்டுறீங்களே... அதை உங்களுக்கு எப்படி திருப்பி தர போரேணு தெரியல. தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி நடந்துக்கிறேன் கண்ணா. கடவுள் ரூபத்துல இருக்கிற உங்களோட அன்பு எனக்கு எப்போதும் இருக்கும். சீக்கிரமா திரும்பி வந்துடுவேன். ஓகே பை. இதனிடையே, ஓய்வுக்காகவும் குறிப்பிட்ட பரிசோதனைக்காகவும் ரஜினி வெளிநாடு செல்வதாக ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Post a Comment