5/31/2011 12:14:14 PM
இதுதாண்டா போலீஸ் பாகம் 2 படபிடிப்பின்போது நடிகர் ராஜ சேகருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர். இவர் தற்போது, "மஹா காளி" என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். படத்தை அவரது மனைவி நடிகை ஜீவிதா இயக்கி வருகிறார். இந்த படம் தமிழில் "இதுதாண்டா போலீஸ் பாகம் 2' என்ற பெயரில் சூட்டிங் நடந்து வருகிறது. இதனையும் நடிகை ஜீவிதாவே இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்திற்கான சூட்டிங் நடந்து வருகிறது.
இதுதாண்டா போலீஸ் பாகம் 2' படத்துக்கான சில காட்சிகள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை படமாக்கப்பட்டது. வில்லன்களுடன் கதாநாயகன் ராஜசேகர் மோதும் பரபரப்பான சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்து கொண்டிருந்தார். 10 அடி உயரத்துக்கு எகிறி குதித்து வில்லனுடன் மோதும் காட்சியில் நடித்த சில துணை ஸ்ட ன்ட் நடிகர்கள் சரியாக நடிக்கவில்லை. எனவே, அந்த காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது.
வில்லனுடன் மோதியபோது நிலை தடுமாறி 10 அடி உயரத்தில் இருந்து ராஜசேகர் கீழே விழுந்தார். எதிர்பாராத விதமாக அவரது முகமும் தரையில் மோதியது. இதனால் அவரது முகத்தில் தரையில் இருந்த ஜல்லி கற்கள் குத்தின. அத்துடன் அவரது முட்டியிலும் வலது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் துடித்தார். இந்த சம்பவத்தை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக விரைந்து சென்று டாக்டர் ராஜசேகரை மீட்டு ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் உடனடியாக முதல் உதவி அளித்தனர். அவருக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் நடிகை ஜீவிதா மற்றும் அவரது தம்பி நடிகர் செல்வா ஆகியோர் உள்ளனர்.
Post a Comment