செல்வராகவன் அதிரடி நீக்கம்: விஸ்வரூபத்தை கமல் ஹாஸனே இயக்குகிறார்!!

|

Tags:


கமல் - செல்வராகவன் இடையே கடுமையான கருத்துவேறுபாடு இருப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தன்னைப் பார்க்க வந்த செல்வராகவனை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமலே கமல் திருப்பி அனுப்பியதைப் பற்றியும் கூறியிருந்தோம்.

ஆனால் இதை மறுத்து வந்த தயாரிப்பாளர், கமல் - செல்வராகவன் குழு லண்டனில் படப்பிடிப்பு நடத்துவதாக நேற்று கூறியிருந்தாரம. ஆனால் இன்று அந்த செய்தி புஸ்வாணமாகிவிட்டது.

விஸ்வரூபம் படத்துக்காக கமல்-சோனாக்ஷி சின்ஹா லண்டன் போவது மட்டுமே உண்மை. ஆனால் படத்தை இயக்குபவர் செல்வராகவன் அல்ல. கமல்ஹாஸன்!!

டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கதை-திரைக்கதை-வசனம்- எழுதி இயக்குகிறார் கமல்ஹாஸன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்.

செல்வராகவன் தூக்கப்பட்டது ஏன்?

கடந்த பல வாரங்களாகவே இந்தப் படம் தொடர்பாக கமல்-செல்வராகவன் இடையே கடும் பனிப்போர் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டாராம்.

காத்திருக்க முடியாது...

அதுவரை காத்திருக்க முடியாது என கமல் கூறியதை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டாராம். நேற்று கமல்ஹாசனும் தயாரிப்பாளரும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இதன்படி இயக்குநராக இருந்த செல்வராகவன் தூக்கப்பட்டார். ஜுன் முதல் வாரத்திலிருந்து கமல்ஹாஸன் இயக்கத்தில் இந்தப் படம் ஆரம்பமாகிறது.

லண்டனில் படப்பிடிப்பு

படப்பிடிப்பு லண்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. 'தசாவதாரம்' படத்தை விட, பத்து மடங்கு பிரமாண்டமான முறையில், 'விஸ்வரூபம்' உருவாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. 'ஹாலிவுட்'டின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் பணிபுரிகிறார்கள்.

சோனாக்ஷி சின்ஹா

இளமையான புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் தோன்றுவார். அவருடைய தோற்றத்தை 'ஹாலிவுட்' தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். படத்தின் உடையலங்காரத்தை நடிகை கவுதமி கவனிக்கிறார்.

கதாநாயகியாக, பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், ரெட் காமிரா மூலம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

கமல்ஹாசனின் பிறந்தநாளான, வரும் நவம்பர் 7-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஹே ராம், விருமாண்டிக்குப் பிறகு கமல் நேரடி இயக்குநராகப் பணியாற்றும் மூன்றாவது படம் இது.
 

Post a Comment