அதிமுக பிரமுகரிடம் பிக்பாக்கெட் அடித்த நடிகர் கைது!

|



சென்னை: அதிமுக பிரமுகரின் கிரடிட் கார்டை திருடிய காதலும் கற்று மற பட ஹீரோ கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.


தஞ்சையை அடுத்த கடம்பங்குடியைச் சேர்ந்தவர் ரஞ்சன் (வயது 54). இவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையை யாரோ திருடிச்சென்று விட்டனர். அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செக் புக் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருந்தார்.

இது குறித்து ரஞ்சன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கிரெடிட் கார்டை திருடியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர் போலீசார்.

அப்போது ரஞ்சனிடம் திருடப்பட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தி சென்னையில் உள்ள பல்வேறு கடைகளில் எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இளைஞர் ஒருவர் அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது. முகப்பேரில் உள்ள ஒரு கடையில், விலை உயர்ந்த டி.வி. மற்றும் மைக்ரோ ஓவன் அடுப்பு ஆகியவற்றை வாங்கியபோது பிடிபட்டார்.

சினிமா ஹீரோ

ரஞ்சனிடம் கிரெடிட் கார்டை திருடி பொருட்களை வாங்கி வந்தவர் கார்த்திக் என்ற சினிமா நடிகர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மகளிர்க்காக, காதலும் கற்று மற ஆகிய தமிழ் படங்களிலும், சனம் என்ற தெலுங்கு படத்திலும் கார்த்திக் நடித்துள்ளார்.

திருத்தணியைச் சேர்ந்த இவர், தற்போது முகப்பேரில் வசித்து வருகிறார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ள இவர், அ.தி.மு.க. அலுவலகத்தில் வைத்து ரஞ்சனிடம் பையை பிக்பாக்கெட் அடித்துள்ளார்.

இவரது சகோதரர் சென்னையில் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் பிரபல ஓட்டல் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Karthik, hero of films like Kadhalum Katru Mara and Magalirkkaga has arrested by Chennai police for pickpoketing ADMK functionary. Karthik's brother is the owner of popular Restaurant chain in Chennai.
 

Post a Comment