எந்திரன் கதை விவகாரம்: சன் பிக்சர்ஸ், ஷங்கருக்கு சம்மன்

|

Tags:


சென்னை: எந்திரன் படத்தின் கதை விவகாரம் குறித்து எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரஜினி, ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் எந்திரன். ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் 2010-ல் ரிலீசானது.

எந்திரன் படத்தின் கதை தனக்கு சொந்தமானது என்று சென்னை ராயப் பேட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உரிமை கோரி எழும்பூர் 13-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "நான் 1996-ல் ஜுகிபா என்ற பெயரில் சிறுகதை எழுதினேன். அக்கதை தமிழ் மாத இதழில் வெளியானது. 2007-ல் அக்கதையை ஒரு புத்தக நிறுவனம் அதனுடைய புத்தகத்தில் பிரசுரித்தது. அது புத்தக கண்காட்சிகளில் விற்பனையானது. அரசு நூலகங்களுக்கும் வாங்கப்பட்டன.

அந்த கதையை தழுவி இயக்குனர் ஷங்கர் எந்திரன் என்ற படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார். இதையடுத்து ஷங்கர் மீதும் தயாரிப்பாளர் மீதும் மோசடி காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்தேன். அந்த கதையின் காப்புரிமை என்னிடமே உள்ளதென்றும் என்னிடம் அனுமதி பெறாமல் படம் எடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்.

ஆனால் தயாரிப்பாளர் பெயரை புகாரில் இருந்து நீக்கினால்தான் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று வாய்மொழியாக என்னிடம் தெரிவித்தனர். நான் மறுத்து விட்டேன். இதனால் புகார் முடித்து வைக்கப்பட்டது. எனவேதான் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளேன், என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை 13-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சிவகுமார் விசாரித்தார். ஆரூர் தமிழ்நாடன் சார்பில் சார்பில் வக்கீல் எட்விக் ஆஜரானார். இந்த வழக்கில் அடுத்த மாதம் 24-ந்தேதி இயக்குனர் ஷங்கரும், தயாரிப்பாளரும் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்
 

Post a Comment