5/2/2011 11:45:36 AM
தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது பீரியட் படங்களின் பக்கம் இயக்குனர்களின் பார்வை திரும்பியுள்ளது. தமிழ் சினிமாவில் சரித்திரப் படங்கள் கோலோச்சிய காலம் உண்டு. சரித்திரப் படங்களுக்கு மினிமம் கியாரண்டி கூட இருந்தது. ஒரு காலகட்டத்தில் அதுவே மக்களுக்கு திகட்ட, பெரிய ஹீரோக்கள் நடித்த சரித்திரப் படங்கள் கூட தோல்வியைத் தழுவியது. பிறகு சரித்திரப் படங்களின் மவுசு குறைந்தது. தமிழ் சினிமா கிராமத்தை நோக்கி நகர்ந்ததும், சரித்திரப் படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. அபூர்வமாக சில படங்கள் வந்தபோதும் அது பெரும் வரவேற்பை பெறவில்லை. பக்தி படங்களைப்போலவே சரித்திரப் படங்களும் 'அவுட் ஆஃப் பேஷன்' ஆனது. ஆனால் இப்போது சரித்திரப் படங்கள் மற்றும் சரித்திர காலத்தில் நடந்த கதைகளாகச் சொல்லப்படும் படங்களின் வரத்து அதிகரிக்க துவங்கியிருக்கிறது. இவற்றை பீரியட் பிலிம் என்று அழைக்கிறார்கள்.
இதை துவக்கி வைத்தது நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த பீரியட் படமான 'உளியின் ஓசை'. பிறகு 'ஆயிரத்தில் ஒருவன்'. நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட சோழர்கள், எங்கோ கண்காணாத தேசத்தில் தங்களைத் தேடி தூதுவன் வருவார் என்று காட்டுமிராண்டிகளாக வாழ்வதாக, கற்பனையாக சொன்ன படம். சமீபத்தில் வெளிவந்த 'பொன்னர் சங்கர்' படம் இரட்டை சகோதரர்களின் கதையைச் சொன்னது. இதுதவிர தற்போது ரஜினி நடித்து வரும், 'ராணா' 17ம் நூற்றாண்டு பின்னணியிலான பீரியட் படம்தான். இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் 'அரவான்' 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்களின் கதையை சொல்கிறது. 'காமராஜ்' படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் 'அற்றைத் திங்கள் அந்நிலவில்' என்ற படத்தை தயாரிக்க உள்ளார். இது சங்க காலத்தில் நடப்பது மாதிரியான கதை. ராமாயணக் கதையை இக் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி 'ராவணன்' படத்தை இயக்கிய மணிரத்னம், அடுத்து கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்குகிறார்.
இதற்கிடையில் சென்ற நூற்றாண்டின் துவக்கம், நடுப்பகுதி 1980ம் ஆண்டுவாக்கில் நடந்த கதை என சமீப கால பீரியட் படங்களும் அவ்வப்போது வெளிவந்துள்ளது. 'மதராச பட்டினம்' 1940களில் நடந்த கதையாகச் சொல்லப்பட்டது. சசிகுமார் இயக்கிய 'சுப்ரமணிபுரம்', சேரன் இயக்கிய 'பொக்கிஷம்' 80 களில் நடந்த கதையாக உருவாக்கப்பட்டது. இப்போது செல்வா இயக்கியுள்ள 'நாங்க' உட்பட சில படங்கள் பீரியட் படங்களாக உருவாகி வருகிறது. திடீரென பீரியட் பட மோகம் வர காரணம் என்ன என்று 'அரவான்' படத்தை இயக்கி வரும் வசந்தபாலனிடம் கேட்டபோது, 'சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலை படித்துக்கொண்டிருக்கும்போது அதில் ஒரு பகுதியை படமாக்கலாம் என்று தோன்றியது. இதை தயாரிப்பாளரிடம் சொன்னதும் சரி என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் அரவான். வேறு எந்த திட்டமும் வைத்துக்கொண்டு சரித்திரப் படத்தை இயக்கவில்லை' என்றார்.
'தமிழ் சினிமாவில் அவ்வப்போது இப்படி சில, கதை சீசன்கள் வருவதுண்டு. அதுபோல இதுவும் ஒரு சீசன். புராண படங்கள், சரித்திர படங்கள், சமூக படங்கள், கிராமத்துப் படங்கள், கேன்சர் நோய் படங்கள், காதல் படங்கள், கடத்தல் படங்கள், ரீமேக் படங்கள், மாயாஜால படங்கள், பக்தி படங்கள் இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சீசன் இருக்கும். இப்போது பீரியட் சீசன். தொடர்ந்து படங்கள் வெற்றி பெற்றால் இந்த சீசன் கொஞ்ச நாளைக்கு தொடரும். இல்லாவிட்டால் சீக்கிரமே அடுத்த கதை சீசன் தொடங்கிவிடும்' என்கிறார் அனுபவம் வாய்ந்த இயக்குனர் ஒருவர்.
Post a Comment