அதிமுக வெற்றிச் செய்தி கிடைத்த வேகத்தில் ஜெயா டிவிக்கு மாறிய வேலாயுதம்!!

|

Tags:


அதிகாரம், தேர்தல் வெற்றி இவற்றை வைத்துதான் கோடம்பாக்கத்தில் எதுவுமே தீர்மானிக்கப்படுகிறது.

நடிகர் விஜய் ஆரம்பத்தில் திமுக அபிமானியாக இருந்தார். ஆனால் கருணாநிதியின் பேரன்கள் எடுத்த படங்களில் நடித்து, தோல்வி கண்டு, அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அதிமுக முகாம் பக்கம் போனார். ஆனாலும் வெளிப்படையாக தனது ஆதரவைக் காட்டவில்லை.

இந்த நிலையில் தேர்தல் வந்தது. அவரும் வேலாயுதம் படம் நடித்துக் கொண்டிருந்தார் அந்த தருணத்தில். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் வி ரவிச்சந்திரன் படத்தை யாருக்கு விற்பது என்பதில் தெளிவற்ற நிலையில் இருந்தார். சன் டிவி தரப்பு அவரிடம் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தன் படம் சன் னுக்கு போகக் கூடாது என்பதில் குறியாக இருந்தார் விஜய்.

எனவே மே13-ம் தேதிக்குப் பிறகு இதுபற்றி முடிவெடுக்கலாம் என்று ஒத்திப் போட்டார் ரவிசந்திரன்.

இப்போது அதிமுக ஜெயித்துவிட்டது தேர்தலில். இன்று காலை அதிமுக முன்னிலை குறித்த செய்திகள் வரத் துவங்கிய அடுத்த கணமே, வேலாயுதம் படத்தின் டிரைலர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாக ஆரம்பித்துவிட்டது!

அம்மா வருவாரா? சிடியை வெளியிடுவாரா?

இதற்கிடையே நாளை நடக்கும் விஜய்யின் வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அம்மா வருவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை( மே 14ம் தேதி) சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது.

விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. எனவே, ஜெயலலிதாதான் அடுத்த முதல்வர்.

புதிய அமைச்சரவைப் பணியைத் துவங்கி மும்முரமாக இருக்கப்போகும் ஜெயலலிதா நாளை நடக்கும் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருவது சந்தேகம் தான் என்று கூறியுள்ளனர்.

விஜய்க்கு விருப்பமான அதிமுக அரசு அமைந்தும், முதல் ஏமாற்றம் அவருக்கே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment