தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ.சி திடீர் தேர்வு

|

Tags:


தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அதிமுக ஆதரவு எஸ்.ஏ.சந்திரசேகர் திடீரென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் புதிய பூகம்பம் வெடித்துள்ளது. திமுககாரரான ராம.நாராயணன் முதல் ஆளாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அதேபோல செயலாளர் சிவசக்தி பாண்டியனும் விலகினார். பெப்சி தலைவர் வி.சி.குகநாதனும் விலகினார்.

இருப்பினும் பிற நிர்வாகிகள் இதுவரை விலகவில்லை. அவர்கள் அத்தனை பேரும் பதவிகளை விட்டு ஓடிப் போய் விட வேண்டும் என்று மூத்த தயாரிப்பாளர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் ராம.நாராயணன் மீது சரமாரியான புகார்கள் கூறப்பட்டது. அவர் சங்கத்தை திமுகவின் கைக்கூலியாக மாற்றி விட்டார். ரவுடிகள் சங்கமாக மாற்றி விட்டார். கட்டப் பஞ்சாயத்து செய்து வந்தார். ரூ. 15 கோடி மோசடி செய்தார் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களைக் கூறினர் தயாரிப்பாளர்கள்.

விரைவில் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைவராக
பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேர்தல் நடைபெறுமா அல்லது எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் தொடர்ந்து சங்கம் செயல்படுமா என்பது தெரியவில்லை.

திமுகவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரமும் செய்தார். அதிமுக ஆட்சியைப் பிடித்ததும், திரையுலகிலிருந்து முதல் நபராக அவரும், நடிகர் விஜய்யும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

கேயார் விதிக்கும் 2 நாள் கெடு

இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் அனைவரும் இன்னும் 2 நாட்களில் பதவி விலக வேண்டும் என்று இயக்குநர் கேயார் கெடு விதித்துள்ளார்.
 

Post a Comment