ரஜினி நலமாக உள்ளார், இட்லி வடை சாப்பிட்டார்-டாக்டர் தணிகாச்சலம்

|

Tags:



சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அதேபோல அவரது டாக்டர் தணிகாச்சலமும், ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், இட்லி வடை சாப்பிட்டதாகவும், லதா வைத்துக் கொண்டு வந்து வாழைத் தண்டு ரசத்தை ருசித்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த 13-ம் தேதி போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும் ரஜினி குறித்து சிலர் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பியவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை லதா ரஜினிகாந்த் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

ரஜினி பூரண நலத்துடன் உள்ளார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளார். நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காகத் தான் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர் என்றார்.

ரஜினியின் உடல் நலம் குறித்து மூத்த மருத்துவர் எஸ். தணிகாசலம் கூறியதாவது,

ரஜினி உற்சாகத்துடன் காணப்படுகிறார். அவர் தனது குடும்பத்தாருடன் பேசினார். அவர் நல்ல ஆரோக்கியமான மனிதர். சுவாசக் கோளாறு மற்றும் வயிற்றுக் கோளாறுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வழக்கம்போல் அவர் இன்று காலையும் 2 இட்லி, ஒரு வடை சாப்பிட்டார்.மேலும் லதா ரஜினிகாந்த் வைத்துக் கொண்டு வந்த வாழைத்தண்டு ரசத்தையும் ருசித்துச் சாப்பிட்டார். ரஜினி நலமாக இருக்கிறார் என்பதை நிரூபிக்க இதை விட வேறு எதைச் சொல்வது என்று கேட்டார்.

 

Post a Comment