காதல் கதைகள்தான் எடுபடும் : டி.ராஜேந்தர்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதல் கதைகள்தான் எடுபடும் : டி.ராஜேந்தர்

6/18/2011 10:39:18 AM

'சென்டிமென்ட் கதைகள் எடுபடாது. இனி, காதல் கதைகள்தான் ஹிட்டாகும்' என்று டி.ராஜேந்தர் பேசினார். ஏ.ஜி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆர்.குணசேகரன், கே.என்.ஆதிநாராயணன் தயாரிக்கும் படம், 'டூ'. சஞ்சய் ஹீரோ. சுமித்ரா மகள் நட்சத்திரா ஹீரோயின். ஒளிப்பதிவு, சி.ஆர்.மாறவர்மன். இசை, அபிஷேக்-லாரன்ஸ். பாடல்கள்: நா.முத்துக்குமார், யுகபாரதி, ஜி.குமார். ஸ்ரீராம் பத்மநாபன் இயக்குகிறார். இப்படத்தின் பாடலை வெளியிட்டு, டி.ராஜேந்தர் பேசியதாவது: நான் கோடியை நம்பி படம் எடுக்க வந்தவன் அல்ல. தாடியை நம்பி படம் எடுத்தவன். 'ஒருதலை ராகம்' படத்துக்கு 108 பாட்டுகள் போட்டேன். ஒரு பாடலில் 9 குரல்கள் தேவைப்பட்டது. நானே குரல் மாற்றி பாடினேன். யாருக்காவது அது தெரியுமா? 10 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட அப்படம், 15 கோடி வரை வசூல் செய்தது. 'ரயில் பயணங்களில்' படத்தை 10 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் எடுத்தேன். அது, அப்போதைய ரஜினி படத்தின் கலெக்ஷனை தாண்டி வசூல் செய்தது. 'நெஞ்சில் ஒரு ராகம்' படத்தையும் குறைந்த செலவில் உருவாக்கினோம்.

இப்போது சினிமாவின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அப்போது என் படங்களுக்கு பிரமாண்ட செட்கள் போட்டேன். 500 கார்பென்டர்கள் பணியாற்றினார்கள். இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. கோடம்பாக்கத்தில் இருந்த சினிமா, இப்போது தேனிக்கும், ஆண்டிப்பட்டிக்கும் சென்றுவிட்டது. தொழில்நுட்பங்கள் அதிவேகமாக மாறியதற்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சின்சியாரிட்டியும், கடின உழைப்பும் இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம். சப்ஜெக்ட் வித்தியாசமாக இருந்தால் மட்டுமே படம் வெற்றிபெறும்.
இதற்கு 'களவாணி', 'மைனா' படங்களை உதாரணம் சொல்லலாம். இப்போது வயதானவர்களும், பெண்களும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பது இல்லை. இந்நிலையில் 'என் தங்கை கல்யாணி'யையோ, 'தங்கைக்கோர் கீதம்' படத்தையோ என்னால் தர முடியாது.

தியேட்டருக்கு வரும் இளைஞர்களின் மனதைக் கவர வேண்டும் என்றால், காதலை நக்கலாகவும், லொள்ளாகவும் சொல்லும் படத்தை தர வேண்டும். இப்போது நான் இயக்கும் 'ஒருதலைக் காதல்', இளைஞர்களுக்கான காதல் கதையாக உருவாகிறது. இனி, சென்டிமென்ட் கதைகளை படமாக்க மாட்டேன். இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார். விழாவில் கே.ஆர்.ஜி., ஆர்.பி.சவுத்ரி, கேயார், பட்டியல் சேகர், ஆர்.கே.செல்வமணி, வசந்த், தனஞ்செயன், சுமித்ரா, கிருஷ்ணா, சோனியா அகர்வால், சற்குணம், யுகபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Post a Comment