மறைந்த `நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனின் இளைய மகன் பிரபு. 1982-ம் வருடம், சங்கிலி என்ற படத்தின் மூலம் இவரை அறிமுகம் செய்தார் சிவாஜி. அதன் பிறகு கதாநாயகனாக உயர்ந்த பிரபு, பல வெற்றிப் படங்களின் நாயகன்.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர் பிரபுதான். சின்னத் தம்பி படம் அவரது வெற்றியின் சிகரம்.
இவருடைய மகன் விக்ரம் பிரபு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிலிம் அகடமியில், திரைப்பட தொழில்நுட்பம் படித்தவர். இவரை சினிமாவில் நடிக்க வைப்பதற்கு பல பட நிறுவனங்கள் முன்வந்தன. தகுந்த சந்தர்ப்பத்துக்காக விக்ரம் பிரபு காத்திருந்தார்.
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், விக்ரம் பிரபு நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தை மைனா படம் தந்த பிரபு சாலமன் இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
விக்ரம் என்ற பெயரில் ஏற்கனவே பிரபல நடிகர் இருப்பதால், இவருடைய பெயர் மாற்றப்படுகிறது. இந்தப் படத்தில் படத்தில், இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவருடைய பெயரும் மாற்றப்படுகிறது.
யானைகள் பற்றிய படம்…
இந்தப் படம் யானைகளின் வாழ்நிலையை பின்புலமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே நாம் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.
சமீபகாலமாக, காட்டு யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை.
இதுகுறித்து பிரபு சாலமன் கூறுகையில், “ஊருக்குள் வந்து மக்களையும் பயிர்களையும் நாசம் செய்யும் யானைகளை விரட்ட, வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு கும்கி யானைகள் என்று பெயர். அந்த கும்கி யானைகள் பற்றியும் கதையில் சொல்லப்படுகிறது. கதைப்படி, படத்தின் கதாநாயகன், கும்கி யானையின் பயிற்சியாளர்.
அந்த கதாபாத்திரத்துக்கான நாயகனை தேடி 6 மாதங்களாக பல ஊர்களில் அலைந்தேன். விக்ரம் பிரபுவை சமீபத்தில்தான் பார்த்தேன். என் கதைக்கும், நான் கற்பனை செய்திருந்த கதாபாத்திரத்துக்கும் அவர் நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார்.
அவரை, யானைகளுடன் பழகவிடுவதற்காக, கேரள மாநிலம் ஒத்தப்பாளையத்துக்கு அனுப்ப இருக்கிறேன். 15 நாட்கள் யானைகளுடன் அவர் பழகியபின், படப்பிடிப்பு தொடங்கும்,” என்றார்.
ஏற்கெனவே சிவாஜியின் பேரன்கள் துஷ்யந்த், ஜூனியர் சிவாஜி ஆகியோர் சினிமாவில் அறிமுகமானது நினைவிருக்கலாம்.
Post a Comment