ரஜினி பழையபடி சுறுசுறுப்பாகிவிட்டார்! - சிங்கப்பூரிலிருந்து திரும்பிய தனுஷ் பேட்டி

|


சென்னை: ரஜினி நலமுடன் உள்ளார். பழைய சுறுசுறுப்புக்கு திரும்பிவிட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து அடுத்த மாதம் சென்னை திரும்புவார், என்று, நடிகர் தனுஷ் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் மூச்சுதிணறல், சிறுநீரக பாதிப்பு போன்ற உடல் நலக் கோளாறுகளுக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் தனியாக ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். டாக்டர்கள் தினமும் அவரை வீட்டில் போய் பார்த்து வேண்டிய சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் கூறி வருகின்றனர்.

ரஜினி பூரண நலத்துடன் இருப்பதால், அவருடன் தங்கியிருந்த மனைவி லதா ரஜினி வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினார். அடுத்து ரஜினிகாந்தை பார்க்க சிங்கப்பூர் சென்றிருந்த அவரது மூத்த மருமகன் நடிகர் தனுஷ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இரவு 10-30 மணிக்கு சென்னை திரும்பினார்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். தனி வீட்டில் அவர் தங்கி இருந்தபடியே, டாக்டர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பழைய சுறுசுறுப்புக்குத் திரும்பிவிட்டார்.

சிங்கப்பூரில் ஷாப்பிங் போக விரும்புகிறார். அந்த அளவு அவர் நார்மலாகிவிட்டார்.

வழக்கமான சில சிகிச்சைகள் முடிந்ததும், அடுத்த மாதம் அவர் சென்னை திரும்புவார்.

இவ்வாறு தனுஷ் கூறினார்.
 

Post a Comment