கனடாவில் அமர்க்களமாக நடந்த ஐஃபா விழா!

|


டொரண்டா: கடந்த ஆண்டு கொழும்பில் சந்தித்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக சேர்த்து அமர்க்களமாக ஐஃபா விழாவை நடத்தினர் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி ஏற்பாட்டாளர்கள்.

கனடா தலைநகர் டொராண்டாவில் சர்வதேச இந்திய திரை அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடந்தது. பல்வேறு கலைஞர்களும் கலந்து கொண்டு, இசை, நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.

மைக்கேல் ஜாக்ஸனுக்கு அஞ்சலி

பாப் பாடகர் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் தம்பி ஜெர்மைன் ஜாக்சன் மற்றும் இந்திப் பாடலாசிரியர் சோனு நிகாம் இணைந்து இசை விருந்து படைத்தனர்.

மைக்கேல் ஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தின் சமயத்தில் இந்த விழா நடந்ததால், மைக்கேல் ஜாக்சனை நினைவு கூறும் பாடல்கள் பாடப்பட்டன. சோனு நிகாம் பாடல்களை எழுதியிருந்தார். அப்போது, அரங்கத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர்.

ஷாரூக் நடனம்

பின்னர் 4 மணி நேரம் நடந்த ராக் ஷோவில், ஷாருக்கான், அனுஷ்கா, சர்மா, தியா மிர்சா, மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட இந்திய சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இசை, நடனம், பேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியை கரன் ஜோகர் தொகுத்து வழங்கினார்.

முழங்காலில் கடும் காயம் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஆடினார் ஷாரூக்.

பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் சல்மான்கான் நடித்த தபாங் ஏழு விருதுகளை அள்ளியது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 3 விருதுகளையும், பாண்ட் பஜா பாரா இந்திப் படம் 3 விருதுகளையும் பெற்றன.

ஷாரூக்கானின் மைநேம் ஈஸ் கானுக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை ஆகிய மூன்று முக்கிய விருதுகள் கிடைத்தன.
 

Post a Comment