6/21/2011 12:05:40 PM
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா, பொதுச்செயலாளராக அமீர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பாரதிராஜா தலைவராக இருந்தார். அவருடைய பதவிக்காலம் முடிந்ததை அடுத்து, 2011-13ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. பாடலாசிரியர் பிறைசூடன் தேர்தலை நடத்தி வைத்தார். தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எஸ்.முரளி போட்டியிட்டார். பொதுச்செயலாளர் பதவிக்கு அமீர், அப்துல் மஜித் போட்டியிட்டனர். 4 இணை செயலாளர்கள் பதவிக்கு 10 பேர்களும், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேர்களும் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி, பொருளாளர் பதவிக்கு எஸ்.பி.ஜனநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் 2,100 பேருக்கு மேல் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் நேரில் வந்து ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கை 1,279. நேற்று முன்தினம் இரவு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால், அனைத்து முடிவும் ஒரே நேரத்தில் தெரிய வேண்டும் என்று நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தலைவராக பாரதிராஜா வெற்றிபெற்றார். அவர் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 1,003. தபால் ஓட்டுகள் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை. பொதுச்செயலாளராக அமீர் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 901. தபால் ஓட்டு எண்ணப்படவில்லை. இணைச் செயலாளர்களாக பிரபு சாலமன் (905), எஸ்.எஸ்.ஸ்டான்லி (716), தம்பிதுரை (696), வேல்முருகன் (655) வெற்றிபெற்றனர். நிருபர்களிடம் பேசிய அமீர், 'எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வாக்களித்த இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இயக்குனர்கள் சங்கத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமை குறித்து சந்தோஷமாக இருக்கிறது. பொதுச்செயலாளராக வெற்றிபெற்ற நான், சிறப்பாக செயலாற்றுவேன். அடுத்தமுறை போட்டியிட மாட்டேன்' என்றார்.
Post a Comment