வாஸ்துப்படி மாற்றப்படுகிறது ரஜினியின் போயஸ் கார்டன் வீடு!

|


சென்னை: போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு வாஸ்து சாஸ்திரப்படி புதுப்பிக்கப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து ரஜினி வரும்போது புதுமனை புகுவிழா நடத்தி குடியேற திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த 'ராணா' படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மருத்துவமனை, சிகிச்சை என அவர் பெரும் சோதனைக்கு உள்ளானார்.

அவருக்காக உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இப்போது ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கடந்த வாரம் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இப்போது அவர், டாக்டர்கள் அறிவுரையின்படி, குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறார். டாக்டர்கள் தினமும் அங்கு சென்று அவரது உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் இன்னும் சில வாரங்கள் சிங்கப்பூரிலேயே தங்கியிருப்பார். அவருடைய உடல்நலனை கருதி, அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுரையின்படி பார்வையாளர்கள் முக்கிய பிரமுகர்களாக இருந்தால்கூட, ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

சமீபத்தில் அவரை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் கன்னட நடிகர் அம்பரீஷும் சந்தித்தாக செய்திகள் வந்தன. ஆனால் இதை அவரது வீட்டினர் உறுதி செய்யவில்லை.

இதற்கிடையில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய வீடு, ஜோதிடர்களின் ஆலோசனைப்படியும், வாஸ்து சாஸ்திரப்படியும் மாற்றி அமைக்கப்படுகிறது. வீட்டில் உள்ள சில பகுதிகளை இடித்துவிட்டு, வாஸ்துப்படி மாற்றியமைக்கிறார்களாம்.

ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பும்போது, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் 'புதுமனை புகுவிழா' நடத்தி குடியேற திட்டமிட்டிருக்கிறார்கள்.

ரஜினியின் வீட்டுக்குப் பெயர் பிருந்தாவனம். அதன் முகப்பில் வாய்மையே வெல்லும் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை 2001-ம் ஆண்டு ரஜினி புதுப்பித்துக் கட்டினார்.
 

Post a Comment