இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை திடீர் நிறுத்தம்!

|


சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை திடீர் என்று நிறுத்தப்பட்டது. முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல் நேற்று காலை நடந்தது. இயக்குநர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எஸ்.முரளி போட்டியிட்டார்.

ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்தால் மாலை 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்திவைத்தார்.

மொத்தம் 1,279 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஓட்டு எண்ணிக்கை இரவு 7 மணிக்கு தொடங்கியது. இரவு 8.45 மணிவரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய அனைத்து பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்கவேண்டும் என்று பெரும்பான்மையான இயக்குநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை திடீர் என்று நிறுத்தப்பட்டது. முடிவுகள் அனைத்தையும் இன்று (திங்கட்கிழமை) அறிவிப்பதாக தேர்தல் அதிகாரி பிறைசூடன் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் பொருளாளர் பதவிக்கு இயக்குநர் ஜனநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதேபோல துணை தலைவர்கள் பதவிக்கு டைரக்டர்கள் சேரன், சமுத்திரக்கனி ஆகியோரும் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 

Post a Comment