அவதூறு வழக்கு: மோகன் லாலுக்கு ஜாமீன்

|


திருச்சூர்: எழுத்தாளரை அவதூறாகப் பேசினார் என தொடரப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருநபர் ஜாமீன் பெற்றார்.

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கம் கடந்த ஆண்டு மூத்த நடிகர் திலகனை சங்கத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்தது. அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

மிகவும் பரபரப்பான இந்த சர்ச்சையில், நடிகர் திலகனுக்கு ஆதரவாக பிரபல எழுத்தாளர் சுகுமார் அழிகோடு செயல்பட்டார். அப்போது சுகுமார் அழிக்கோடை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவதூறாக விமர்சித்ததாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து மோகன்லால் மீது சுகுமார் அழிக்கோடு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வருகிற 22-ந் தேதி மோகன்லால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று திருச்சூர் தலைமை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு பி.எஸ்.அந்தோணி உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால், முன்னதாகவே மோகன்லால் நேற்று கோர்ட்டில் ஆஜராகி, 22-ந் தேதி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், தனக்கு ஜாமீன் வழங்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

 

Post a Comment