வேங்கை... தனுஷுக்கு சிக்கல் தீர்ந்தது!

|


வேங்கை படத் தலைப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விலக்கிக் கொண்ட உயர்நீதிமன்றம், தனுஷ் நடிக்கும் படத்துக்கு அந்தத் தலைப்பை பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.

தனுஷ் - தமன்னா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேங்கை. விஜயா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போதே, வேங்கை என்ற தலைப்பில் இன்னொரு படம் உருவாவது குறித்த அறிவிப்பும் வெளியானது. ஏக சக்ரா மீடியா எனும் நிறுவனத்தின் கலைச்செல்வன் இந்தத் தலைப்பை ஹரிக்கு முன்பே பதிவு செய்து வைத்திருந்ததாகக் கூறி, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

பின்னர் இந்த விவகாரத்தை பேசி முடித்துவிட்டதாக ஹரி தரப்பில் கூறி, படப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.

இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது வேங்கை. இந்த நிலையில் மீண்டும் இந்த தலைப்புக்கு உரிமைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கலைச்செல்வன். விசாரித்த நீதிபதிகள், ஒரு வார காலம் இந்தத் தலைப்பைப் பயன்படுத்த ஹரி மற்றும் தயாரிப்பாளருக்கு தடை விதித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய உயர்நீதிமன்றம், வேங்கை தலைப்பைப் பயன்படுத்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு எந்தத் தடையும் இல்லை என அறிவித்துவிட்டது.
 

Post a Comment