6/20/2011 12:38:41 PM
''தனுஷுக்கு தம்பி நான்…'' என்று ஒரு நடிகர் சொன்னால், 'ஓகோ… தனுஷ் படத்தில் அவருக்குத் தம்பியாக நடிக்கிறார் போலிருக்கிறது…' என்றுதான் அவரை நினைக்கத் தோன்றும். ஆனால் இந்த விஷயம் அப்படியில்லை. மேற்படி ஸ்டேட்மென்ட்டைத் தரும் வருண், தனுஷுக்குத் தம்பியேதான். விவரமாகச் சொன்னால் தனுஷின் கஸின் பிரதர். கஸ்தூரிராஜாவின் தம்பி சேதுராமின் மகனான வருண், இப்போது தி ஃபிலிம் கம்பெனியின் 'மல்லுக்கட்டு' படத்தில் ஹீரோ.
''அப்பாவும் சினிமாவிலதான் இருக்கிறார். ஆனா வியாபாரத்தின் பக்கம். ஓவர்ஸீஸ் டிஸ்ட்ரிபியூட்டரா இருக்கிற அவருக்கு என்னை ஹீரோவாக்கணும்னு ஐடியாவெல்லாம் இல்லை. நீ இதுவாதான் ஆகணும்னு அவர் என்னைக் கட்டாயப்படுத்தவும் இல்லை. நானும் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் படிச்சேன். காலேஜ்ல சேர்க்கும்போதே அப்பாவோட பிசினஸும், பேக்கிரவுண்டும் தெரிஞ்சு பிரின்சிபால் கேட்ட கேள்வி, 'நடுவில படிப்பை விட்டுட்டு பையன் சினிமாவுக்குப் போயிட மாட்டானே…'ங்கிறதுதான். ஆனா காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல என்னோட பங்களிப்பைப் பார்த்த அவரே ஒரு கட்டத்தில, 'காலேஜ் முடிஞ்சதும் வருணை சினிமாவுக்கு நீங்க அனுப்பலாம். நிறைய டேலன்ட்ஸ் அவன்கிட்ட இருக்கு…'ன்னு அப்பாகிட்ட சொன்னார். ஆக, நான் எந்தத் தடையும் இல்லாம, டிகிரியையும் வாங்கிட்டு சினிமாவுக்கு வந்துட்டேன்..!'' என்கிற வருண், நடிக்க முடிவெடுத்ததும் செய்த முதல் வேலை… சினிமாவை முறைப்படி கற்றுக்கொள்ள அசிஸ்டென்ட் டைரக்டர் ஆனது.
'''பூக்கடை ரவி' படத்தில அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்தேன். அந்தப் பயிற்சி சினிமாவையும், தயாரிப்பாளர்கள் பிரதாபன், நந்தகோபாலையும் அறிமுகப்படுத்த, அவங்க டைரக்டர் முருகானந்தத்தை அறிமுகப்படுத்தினாங்க.
விக்ரமன் சாரோட அசிஸ்டென்ட்டான அவர் கதை சொல்லக் கேட்டோம். கேட்ட யாருக்குமே அன்னைக்கு இரவு துக்கமில்லை. அதுக்காக துக்கமும் இல்லை. இரண்டரை மணிநேரப் படத்தில ரெண்டு மணி இருபது நிமிஷம் சிரிச்சுக்கிட்டே இருந்தோம். கடைசி பத்து நிமிஷம் நெகிழ்ச்சியோட எழுந்தோம். அப்படி ஒரு அட்டகாசமான கதை…'' என்ற வருண் தொடர்ந்தார்.
''பேசிக்கிட்டு இருக்கும்போதே அடிக்கிறவன் கோபக்காரன்னா, அடிச்சுட்டுதான் பேசவே ஆரம்பிக்கிறவனை என்னன்னு சொல்ல..? அப்படிப்பட்ட கேரக்டர்தான் எனக்கு. மூக்குக்கு மேல கோபத்தை வச்சுக்கிட்டு மல்லுக்கட்டிட்டு திரியறவனுக்கு, காதலும் எப்படிப்பட்ட மல்லுக்கட்டைக் கொடுக்குதுங்கிறதுதான் படத்தோட ப்ளாட். அதனால படத்தில நாலு ஃபைட் இருக்கு. காமெடி ட்ரீட்மென்ட்டில போற படம்ங்கிறதால மூணு சண்டை காமெடி கலந்தும், கடைசி சண்டை படு உக்கிரமாவும் இருக்கும். பாலா சார் படங்கள் போல சண்டைகள் உண்மையா தெரிய வேண்டி, ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் உண்மையாலுமே அடிக்க வச்சார்.
ஒவ்வொரு நாளும் உடல் முழுக்க காயங்கள்தான். ஒரு கட்டத்தில எனக்கு கைல மூட்டு டிஸ்லொகேஷன் ஆனது.
அதெல்லாம் என் பிரச்னைதானே தவிர, படத்தில என்கூட நடிச்சிருக்க சபேஷ் கார்த்தி காமெடியில பிச்சு உதறியிருக்கார். 'பசங்க' படத்தோட ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், 'வம்சம்' இசையமைப்பாளர் தாஜ்நூர், 'பருத்தி வீரனு'க்காக தேசிய விருது வாங்கிய எடிட்டர் ராஜாமுகமதுன்னு பக்காவா டீம் அமைஞ்சிருக்கு…''
''ஹீரோயின் ஹனிரோஸோட கெமிஸ்ட்ரி பத்தி சொல்லலையே..?''
''நல்லாவே இருந்தது. ஹனி, எனக்கு சீனியர்னாலும் எங்க ரெண்டு பேருக்கும் நடிப்பில நல்ல போட்டி இருந்தது. மத்தபடி காதலுக்கு மரியாதையான கதைங்கிறதால நெருக்கமான காதல் காட்சிகளெல்லாம் இல்லை..!''
அதில் வருத்தமா வருண்..?
Post a Comment