6/8/2011 10:42:53 AM
இன்னும் சில நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகவுள்ள ரஜினி, ரசிகர்களிடம் நேரடியாக பேச ஆர்வமாக உள்ளார் என்று தனுஷ் தெரிவித்தார். 'ராணா' பட ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ரஜினிக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு வீடு திரும்பினார். சில நாட்களில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற, கடந்த மாதம் 27ம் தேதி சென்றார் ரஜினி. அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்த டாக்டர்கள், ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தனுஷ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'ரஜினி உடல்நலம் தேறிவிட்டார். அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தேவையில்லை. 10 நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார்' என்றார். இந்நிலையில், ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. உண்மை நிலை என்ன என்பது குறித்து, சிங்கப்பூரில் உள்ள தனுஷிடம் தினகரன் நிருபர் நேற்று கேட்டபோது, கூறியதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினி, பூரண குணமடைந்து விட்டார். அவர் முன்பு போல் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார். இன்னும் சில நாட்களில், டிஸ்சார்ஜ் ஆகி விடுவார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரார்த்தனையால் சூப்பர் ஸ்டார் உடல்நலம் தேறியுள்ளார். சிங்கப்பூரிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் லதா ரஜினிகாந்த், நான், என் மனைவி ஐஸ்வர்யா, அவரது தங்கை சவுந்தர்யா, எனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் தங்கியிருக்கிறோம். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருக்கும் ரஜினியை நாங்கள் அனைவரும் நன்கு கவனித்துக் கொள்கிறோம். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு இதே அபார்ட்மென்டில் தங்கி ஓய்வு எடுப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. உடல்நலம் தேறியுள்ள ரஜினி, முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, வேறொரு நாட்டுக்குச் சென்று அங்கு ஓய்வு எடுப்பாரா? அல்லது இதே அபார்ட்மென்டில் தங்க சம்மதிப்பாரா? அல்லது சென்னைக்கு வந்து ஓய்வு எடுப்பாரா என்பது பற்றி முடிவு செய்யவில்லை.
நல்ல ஆரோக்கியத்துடன் கலகலப்பாக இருக்கும் ரஜினி, தனது அறையிலுள்ள டி.வியில், படங்கள் பார்த்து ரசிக்கிறார். ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கிறார். தியானம் செய்கிறார். வாக்கிங் செல்கிறார். மேலும் சில உடற்பயிற்சிகளும் செய்கிறார். பேரன்களுடன் விளையாடுகிறார். ரஜினி தனது ரசிகர்களுக்கு 'வாய்ஸ்' மூலம் பேசினார். அவர் ஏன் வீடியோவில் தோன்றி பேசக்கூடாது என்று கேட்கிறார்கள். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின், ரசிகர்களை நேரடியாக சந்தித்து பேச ரஜினி ஆர்வமாக இருக்கிறார். தன் கருத்துகளை அறிக்கை வாயிலாக சொல்லும் எண்ணமும் அவருக்கு இருக்கிறது. எனவே, விரைவில் சூப்பர் ஸ்டார் நலமுடன் சென்னை திரும்புவார். இவ்வாறு தனுஷ் கூறினார்.
Post a Comment