7/4/2011 10:40:44 AM
கார்த்தி-ரஞ்சனி திருமணம் கோவையில் கோலாகலமாக நேற்று நடந்தது. நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் நேரில் வாழ்த்தினர். சிவகுமார்- லட்சுமி தம்பதியின் இளைய மகன் கார்த்தி. ஈரோடு மாவட்டம் பாசூர் அடுத்த குமாரசாமி கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சின்னுசாமி - ஜோதிமீனாட்சி மகள் ரஞ்சனி ஆகியோர் திருமணம், கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று காலை நடந்தது. கொடிசியா அரங்கம் மற்றும் திருமண மேடை வண்ண, வண்ண பூக்களாலும், மின்விளக்குகளாலும் ஜொலித்தது. ஆர்ட் டைரக்டர் சந்திரசேகர் பிரமாண்ட அரங்கம் அமைத்திருந்தார்.
மணமேடையில் நேற்று காலை 5.45 மணி முதல் சடங்குகள் நடந்தன. பெற்றோருக்கு கார்த்தி பாதபூஜை செய்தார். மணமகன் கார்த்தி பட்டுவேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தார். மணமகள் ரஞ்சனி தங்க நிறத்தில் பட்டுப்புடவை மற்றும் வைர நகைகள் அணிந்திருந்தார். பேரூர் பழ.குமரலிங்கம் முற்றிலும் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். சரியாக 6.35 மணிக்கு, சிவகுமார்-லட்சுமி தம்பதியினர் மங்கல நாண் எடுத்து கொடுக்க, மணமகள் ரஞ்சனி கழுத்தில் கார்த்தி தாலி கட்டினார். பின்னர் மணமக்கள் பெற்றோர் காலிலும், நடிகர் சூர்யா-ஜோதிகா காலிலும் விழுந்து ஆசி பெற்றனர்.
மாலை மாற்றும் நிகழ்ச்சியில், கார்த்தி முதலில் ரஞ்சனிக்கு மாலை அணிவித்தார். ரஞ்சனி மாலை அணிவிக்க முயன்றபோது கார்த்தி தலையை பின்வாங்கினார். மூன்று முறை கார்த்தி இதேபோல் காமெடி செய்ய, ரஞ்சனி ஜம்ப் செய்து மாலை அணிவித்தார். இதனால் அரங்கம் கலகலப்பானது. திருமணம் முடிந்ததும், மேடையிலேயே திருமண பதிவு புத்தகத்தில் கார்த்தியும், ரஞ்சனியும் கையெழுத்திட்டனர். இதற்காக பிரத்யேகமாக பதிவுத்துறை அலுவலர்கள் ஆவணங்களை கொண்டு வந்திருந்தனர்.
மணமக்களை இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், லிங்குசாமி, ஆர்.வி. உதயகுமார், பாலா, நடிகர்கள் பிரபு, ராஜேஷ், நிழல்கள் ரவி, பாண்டியராஜன், சரவணன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ், நடிகைகள் ராதிகா, ஜீவிதா, நக்மா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் தொழிலதிபர்கள் கிருஷ்ணராஜ் வாணவராயர், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், சங்கர் வாணவராயர், வனிதா மோகன், டாக்டர் நல்லா பழனிசாமி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் உட்பட ஏராளமானோர் வாழ்த்தினர். இதைத்தொடர்ந்து அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. கொடிசியா அரங்கம் நிரம்பி வழிந்தது. காலை 10 மணி வரை மேடையில் இருந்து மணமக்கள் வாழ்த்துக்களை பெற்றனர். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். திருமணத்துக்கு வந்தவர்களை இருவீட்டாரின் குடும்பத்தினரும் வாசலில் நின்று வரவேற்றனர். மதியம் 12 மணிக்கு கார்த்தி ரசிகர்களுக்காக பிரத்யேக விருந்து அளிக்கப்பட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
கார்த்தி - ரஞ்சனி திருமணம் : நடிகர், நடிகைகள் வாழ்த்து!
Post a Comment