படப்பிடிப்புக்கு டிமிக்கி: நடிகை மீரா ஜாஸ்மினுக்கு நீதிமன்றம் சம்மன்!

|


கோழிக்கோடு: கொடுத்த கால்ஷீட்படி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு கேரள நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஸ்வப்னமாலிகா என்ற மலையாளப் படத்தில் நடிக்க தயாரிப்பாளர் தேவராஜன் என்பவரிடம் ரூ 5 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்.

ஆனால் சொன்னபடி அந்தப் படப்பிடிப்புக்கு போகவில்லை அவர். இதனால் கோபமடைந்த அவர் கோழிக்கோடு முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மீராவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இதில் மீரா ஜாஸ்மினுக்கு சம்மன் அனுப்பியது கோர்ட்.

இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் மீரா ஜாஸ்மின். தேவராஜன் தன்னிடம் சொன்ன கதை வேறு, இப்போது எடுப்பது வேறு என்றும் எனவே இந்த சம்மனை முதலில் ரத்து செய்ய வேண்டும் என்றும் மீரா கேட்டுக் கொண்டார்.

மீராவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது தரப்பு வாதத்தை ஏற்கவில்லை. வரும் 8-ம் தேதிக்குள் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

எனவே வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜராகிறார்.

இப்போதைய நிலவரப்படி மீரா ஜாஸ்மின் மலையாளப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தமிழில் பிரசாந்துடன் மம்பட்டியான் மற்றும் ஆதிநாராயணா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 

Post a Comment