ராணா படத்தின் பெயரை மாற்றுவது பற்றி ரஜினியுடன் பேசவில்லை- கே.எஸ்.ரவிக்குமார்

|


ராணா படத்தின் பெயரை மாற்றுவது பற்றி ரஜினியுடன் பேசவில்லை. பெயர் மாற்றம் குறித்த செய்திகளில் உண்மையில்லை, என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம், 'ராணா.' கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி நடந்தது. அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

'ராணா' படத்தின் படப்பிடிப்பு தொடக்க நாளன்றே ரஜினி உடல் நலம் பாதிக்கப்பட்டதை படக் குழுவினர் அபசகுனமாக கருதுவதாகவும், அதனால் படத்தின் பெயர் மாற்றப்படுவதாகவும் தகவல் பரவியது.

இதுபற்றி கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது, "ராணா படத்தின் பெயர் மாற்றப்படவில்லை. பெயரை மாற்றுவது பற்றி ரஜினியுடன் நான் பேசவில்லை.

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய ரஜினி, இப்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவரை நான் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். 'ராணா' படம் பற்றி பேசி வருகிறேன். பெயர் மாற்றம் செய்யப்படுவது பற்றி நாங்கள் இருவரும் இதுவரை பேசவில்லை. அதுகுறித்த செய்திகளில் ஆதாரமில்லை,'' என்றார்.
 

Post a Comment