7/21/2011 12:34:55 PM
நடிகர் ரவிச்சந்திரன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். 'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரவிச்சந்திரன். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, குமரிப்பெண், நான் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்தார்.
கடந்த 17ம் தேதி அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டது. இதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவரது நுரையீரல் செயல் இழக்க தொடங்கியது. இதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு கோமா நிலையை அடைந்தார். இப்போது அவரை இன்குபேட்டரில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தற்போது ஆபத்தான கட்டத்திலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அவரது மகன் அம்சவர்த்தன் கூறும்போது, 'சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டாலும் அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, நுரையீரல் செயல் இழக்க துவங்கியது. மருத்துவமனையில் சேர்த்தோம். கோமா நிலைக்கு சென்று விட்டதாக நேற்று முன்தினம் இரவு டாக்டர்கள் அறிவித்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நாங்கள் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறோம்' என்றார். ரவிச்சந்திரனுக்கு 71 வயதாகிறது. அவருக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவர்த்தன் என்ற மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
Post a Comment