எனக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாது! - அமிதாப்

|


என் அப்பா உபி… அம்மா சீக்கியர்… மனைவி பெங்காலி… மருமகன் பஞ்சாபி….மருமகள் துளு…. என் வாழ்க்கையில் சாதி என்றால் என்னவென்றே தெரியாது. அப்படி ஒரு சூழலை நான் உணர்ந்ததும் இல்லை,” என்கிறார் பாலிவுட் லெஜன்ட் அமிதாப் பச்சன்.

சாதிவாரி இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைகளை அலசும் படம் ஒன்றில் நடித்துள்ளார் அமிதாப் பச்சன்.

‘அரக்ஷன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோதுதான் அமிதாப் இப்படிக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “என் தந்தை சாதி, இனம், மாநிலம் எதையும் பார்க்காமல் திருமணம் செய்தவர். சின்ன வயதில் என்னைப் பள்ளியில் சேர்த்தபோது, என் சாதியைக் குறிப்பிடவில்லை. பச்சன் என்று குடும்பப் பெயரை மட்டும் அப்பா கொடுத்தார். அதையே பெருமையாக நினைக்கிறேன். பச்சன் என்பது அப்பாவின் செல்லப் பெயர். அவ்வளவுதான்.

பின்னர் நான் ஒரு பெங்காலியை (ஜெயா) திருமணம் செய்தேன். என் சகோதரன் அஜிதாப் ஒரு சிந்திப் பெண்ணை திருமணம் செய்தார். மகள் ஸ்வேதா பஞ்சாபி இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். என் மகன் ஒரு துளு பெண்ணை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்தார்.

எனவே இத்தனை நாள் வாழ்ககையில் எனக்கு சாதி பற்றிய சிந்தனையே வந்ததில்லை,” என்றார் அமிதாப்.

இந்தப் படத்தில் எல்லோரும் சமம்… எல்லோருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தும் ஒரு கல்லூரி முதல்வராக நடித்துள்ளாராம் அமிதாப். இல்லாத ஏழை மாணவர்களுக்கு தனது செலவில் படிப்பு சொல்லித் தரும் கண்ணியமான வேடமாம்.

சரி, இட ஒதுக்கீடு பற்றி அமிதாப் என்னதான் நினைக்கிறார்?

இந்த சர்ச்சைக்குரிய கேள்விக்கு அமிதாப் அளித்த பதில் சாமர்த்தியமானது. “இந்தப் படத்தில் வருகிற பிரின்ஸிபால் கேரக்டருக்காக நான் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். இட ஒதுக்கீடு, சாதீய அமைப்புகள் பற்றி நிறைய படித்தேன். அதை வைத்து சொல்கிறேன். எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களை சம நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மிக அவசியம்,” என்றார்.

 

Post a Comment