சினிமா டிக்கெட் கட்டணம் குறையுமா? - இன்று தெரியும்!!

|


சென்னை: தமிழக திரையரங்குகளில் தாறுமாறாக வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும், குறிப்பாக இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று அவசர கூட்டம் கூட்டி முக்கிய முடிவை அறிவிக்க உள்ளனர் சங்க நிர்வாகிகள்.

சினிமா தியேட்டர்களில், டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்கள் குறைப்பட்டு வருகிறார்கள். திருட்டு டிவிடியை ஒழிக்க அரசு முயன்றும் முடியாமல் போனதற்குக் காரணமே, அதற்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள அமோக ஆதரவுதான்.

பெரிய பட்ஜெட் படங்கள், மற்றும் பண்டிகை கால படங்கள் திரைக்கு வரும் போது, நகர்ப்புற தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை கணிசமாக உயர்த்தி விடுகிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது.

இதனால் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வீடுகளிலேயே அமர்ந்து டிவிடிகளில் படம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ரூ 20க்கு டிவிடியை வாங்கி குடும்பத்தோடு இஷ்டப்பட்ட நேரத்தில் பார்ப்பதற்கு பழகிவிட்டார்கள் மக்கள்.

இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுப்பதற்காக, தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டம், சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அதில், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அப்படி குறைக்காத தியேட்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்

இதேபோல் நடிகர்-நடிகைகளின் சம்பளத்தையும் குறைக்க வேண்டும் என்று இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால், நடிகர்-நடிகைகளின் சம்பளம் தானாகவே குறைந்துவிடும் என்று நம்புவதால், டிக்கெட் கட்டணத்தை குறைக்க முதலில் வற்புறுத்துவது என்ற முடிவுக்கு வினியோகஸ்தர்கள் வந்து இருக்கிறார்கள்.
 

Post a Comment